தோளில் திமுக துண்டு… கோவையில் சுழன்றடித்து பிரச்சாரம் செய்த ஸ்டெபன் : உணர்ச்சிவசப்பட்டவருக்கு மத்திய அரசு வைத்த ‘செக்’..!!

Author: Babu Lakshmanan
17 February 2022, 5:18 pm
Quick Share

கோவை : திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று மாலை 6 மணியுடன் வேட்பாளர்களின் பிரச்சாரம் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று கோவையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, திமுக வேட்பாளர்கள் தங்களின் வார்டுகளில் வாகனப் பேரணியை நடத்தி வந்தனர். அப்போது, நெகொய்டா ஸ்டெபன் மரீஸ் என்ற ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபர், திமுக கொடியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிக்கு ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் பிரச்சாரம் செய்ய என்ன காரணம் என்று..? அந்த நபரிடம் விசாரிக்கப்பட்டது.

அதற்கு, அவர் அளித்த பதிலாவது :-கோவையில் பேருந்து ஒன்றில் பயணித்தபோது நான் டிக்கெட் எடுத்தேன். எனது அருகில் இருந்த பெண் டிக்கெட் எடுக்கவில்லை. அவர் மட்டுமல்ல பேருந்தில் பயணித்த பெண்கள் யாருமே டிக்கெட் எடுக்கவில்லை, எனக் கூறியுள்ளார்.

பேருந்தில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது குறித்து அவரது நண்பர் கோகுல் என்பவருக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் மகளிருக்கு அரசின் இலவச பயணத்திட்டம் பற்றி சொன்னதும் வியந்த ஸ்டெபன், திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விஷா பெற்று இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவருக்கு, அரசியல் உள்ளிட்ட நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை. இப்படியிருக்கையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டெபன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். அதோடு, அவரது விஷா காலம் பிப்.,20ம் தேதி வரையில்தான் உள்ளது.

இந்த சூழலில், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸ்டெபனுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் உள்ள புலம்பெயர் பணியகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தன்னிடம் உள்ள அசல் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Views: - 983

0

0