ரூ.300 கோடியா, ரூ.30 ஆயிரம் கோடியா?…திமுக போட்ட தேர்தல் பிளான் அம்பேல்?…

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 8:24 pm
DMK Plan - Updatenews360
Quick Share

கடந்த 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவற்றை வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயை வங்கிகளில் மாற்ற முடியும் என்றும் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

2000 ரூபாய் செல்லாது

இது 2016ம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு ரிசர்வ் வங்கி பழைய
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது மக்களிடம் ஏற்படுத்திய அதிர்வலையை போல் இப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

ஏனென்றால் இன்று பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் ஜிபே, கியூ.ஆர். கோட் உள்ளிட்ட ஆன் லைன் வங்கி சேவை மூலம் நடக்கிறது. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதால் சாமானியர்கள் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

யாருக்கு அதிர்ச்சி?

அதேநேரம், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பெரும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபல நடிகர்- நடிகைகள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் போன்றோரின் வயிற்றில் நிச்சயம் புளியை கரைத்து விட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில்தான் தலைமை அலுவலக உத்தரவின்படி 2000 ரூபாய் தாள் வாங்கப்பட மாட்டாது, டாஸ்மாக் நிர்வாகம் என்ற அறிவிப்பு நோட்டீஸ் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் மதுபான கடைகளிலும் உடனடியாக ஒட்டப்பட்டது. இது தொடர்பாக தனியார் டிவி செய்தி சேனல் ஒன்றும் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. சமூக நல ஆர்வலர்களிடையே இது பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

டாஸ்மாக்கில் மாற்ற முடியாது?

“பலே பலே, 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் மட்டுமே மாற்ற முடியும். டாஸ்மாக்கில் அதை மாற்றவே முடியாது, தமிழகத்தில் கள்ளத்தனமாக கோடி கோடியாக 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான்.

என்னதான் மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கொண்டிருந்தாலும் கூட 2000 ரூபாய் நோட்டு பதுக்கலை தடுக்க திமுக அரசு தன்னால் முடிந்த வரை உதவி செய்கிறதே” என்று அவர்கள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பரிதாபமாக இறந்த துயரம் கூட சிறிது நேரம் அவர்கள் மனதில் இருந்து அகன்றுபோய் விட்டது.

பின்வாங்கிய அமைச்சர்

ஆனால் சமூக நல ஆர்வலர்களின் இந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. டிவி செய்தி சேனல் வெளியிட்ட தகவலை உடனடியாக மறுத்த மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இது முற்றிலும் தவறான செய்தி. இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதை அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளில் ஒருவரான சி.டி. நிர்மல் குமார் “அமைச்சர், அரசு மற்றும் ஊழியர்கள் என அனைவரும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள் போல…” என்று கிண்டலடித்து உள்ளார்.

தேர்தல் செலவுக்கு ரூ.300 கோடி

இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. இதில் பிரசார பணிகளுக்காக.300 கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனென்றால் அடுத்து அமைய உள்ள மத்திய அரசில், முக்கிய பங்காற்ற விரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு 39 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம் என்று நினைக்கிறார்.

அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக பணத்தை தண்ணீராக வாரி இறைக்க இருப்பதாக தெரிகிறது.

“தேர்தல் பிரச்சார செலவுக்காக மட்டுமே 300 கோடி ரூபாயை திமுக ஒதுக்குகிறது என்றால் ஒரு ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திமுகவுக்கு இதெல்லாம் ஜூஜூபி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக மட்டுமே 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டதாக கூறப்படும் நிலையில் இதெல்லாம் திமுகவுக்கு வெறும் ஜூஜூபி” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“நிச்சயம் இது 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் 2024 தேர்தலுக்கான திமுகவின் மொத்த பட்ஜெட்டே 300 கோடி ரூபாய்தான் என்று இதை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அது தவறான வாதம்.

பிடிஆர் ஆடியோ

ஏனென்றால் கடந்த மாதம் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் வெளியான ஆடியோ ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதியும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு அதை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என கூறிய தகவலுடன் இதை ஒப்பிட்டு பார்க்கும்போது இதே அளவிற்கான தொகையை நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக செலவு செய்யும் என்றே கருதத் தோன்றுகிறது.

மகன், மருமகனின் திணறலுக்கு பக்கபலமாக இருப்பதுபோல்தான், தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து மது வாங்க எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏனென்றால் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

முடங்கும் ரூ.3 லட்சம் கோடி?

மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அப்போது அச்சடிக்கப்பட்டன. அதில் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது. எஞ்சிய சுமார் 3 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக பதுக்கப்பட்டு விட்டது.

இத்தனைக்கும் 2018-19ம் நிதியாண்டிலேயே 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. ஆனாலும் கூட 3 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் வராமலேயே முடங்கிப் போய் இருக்கிறது.

அப்படியென்றால் உதயநிதியும் சபரீசனும் பதுக்கி வைத்திருப்பதாக ஆடியோவில் கூறப்பட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் என்பது நாடு முழுவதுமான மொத்த கருப்பு பண பதுக்கலில் பத்து சதவீதம் என்று கணக்காகிறது.

இந்தப் பணத்தை டாஸ்மாக் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் வெள்ளையாக மாற்றுவதற்கு வழி பிறந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை கிடு கிடுவென அதிகரிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதேபோல் கூட்டுறவு வங்கிகளிலும் பணப்பரிவர்த்தனைகள் எகிறும் வாய்ப்புகளும் அதிகம்.

அலர்ட் கொடுத்த அண்ணாமலை

எனவேதான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய அவசரக் கடிதத்தில்,”திமுக அரசியல்வாதிகள் பண மோசடி மற்றும் ஊழல் செய்வதில் புதிய முறைகளை கண்டுபிடிப்பவர்கள். மூத்த அமைச்சர் ஒருவர் ஒரே ஆண்டில்
30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பாதித்துள்ளார்.

திமுகவினர் சட்டவிரோதமாக சம்பாதித்த, தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் மூலமாக மாற்றுவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே இதுபோன்ற ஆதாரங்கள் மூலமாக அதிகப்படியாக வரும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் உன்னிப்பாக கவனித்து, கண்டுபிடிக்கவேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தவேண்டும்”
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி வீசலாம் என்று நினைத்திருந்த திமுக தலைமைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு இடியாப்ப சிக்கலாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 275

0

0