பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த கொடுமை… தமிழகத்தில் தலைதூக்கிய சாதிய வன்மம்… பதுங்கிய விசிக, மார்க்சிஸ்ட்…?

Author: Babu Lakshmanan
2 November 2023, 9:38 pm
Quick Share

வடமாநிலங்கள் சிலவற்றில் அவ்வப்போது பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் எல்லாம் தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை, அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக நீதி முழுமையாக பின்பற்றப்படுகிறது என்று பெருமையுடன் மார்தட்டிக் கொண்டவர்களுக்கு
பதிலடி கொடுப்பது போல் கடந்த ஓராண்டில் மட்டும் பட்டியலின மக்களுக்கு மூன்று மிகப்பெரிய அநீதிகள் இழைக்கப் பட்டுள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் வகுப்பு மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது, சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் பொதுக் கோவிலுக்குள் சாமி கும்பிட சென்ற பட்டியலின இளைஞனை திமுக நிர்வாகி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை நடத்தி விரட்டியடித்தது, சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவரையும் அவருடைய தங்கையையும் சாதிய வன்மத்துடன் 5 பேர் கொண்ட ஒரு மாணவர் கும்பல் இரவு நேரத்தில் வீடு புகுந்து அறிவாளால் வெட்டியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தது என இந்த மூன்று கொடூர நிகழ்வுகளுமே தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவை.

இந்த நிலையில்தான் வட மாநில பாணியில் நெல்லை மாவட்டத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சாதிய வன்மம் கொண்ட ஆறு பேர் சிறுநீரை கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரவு நேரத்தில் அவர்கள் இருவரும் நிர்வாணப்படுத்தப்பட்டு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 30ம் தேதி இரவு 8 மணி அளவில் நடந்துள்ள இந்த சம்பவம், தமிழகத்தில் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேள்வி கேட்க வைப்பது போலவும் அமைந்துள்ளது.

அன்றைய தினம் நெல்லை நகரில் மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களான மனோஜ் குமார், மாரியப்பன் இருவரும் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ஒரு கும்பல் அந்த இருவரையும் திடீரென வழிமறித்து சாதிப் பெயரைக் கேட்டுள்ளது.

அதற்கு, நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என அவர்கள் பதிலளித்த நிலையில் அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்து கைகளில் வைத்திருந்த வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அந்த கும்பல் அவர்களை கொடூரமாக தாக்கியது. அதோடு, சாதிப் பெயரை சொல்லி திட்டியபடி இரண்டு இளைஞர்கள் மீது சிறுநீரும் கழித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களிடமும் பணம் கேட்டு மிரட்டி அவர்களின் செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளையும் பறித்துக் கொண்டு இருவரையும் ஓட ஓட விரட்டியும் அடித்தனர்.

பலத்த காயங்களுடன், உடம்பில் அரைகுறை உடையுடன் வீடு வந்த மனோஜ் குமார், மாரியப்பன் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது பற்றிய தகவலை அறிந்த நெல்லை தச்சநல்லூர் போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ராஜவல்லிபுரம் மற்றும் மணக்காட்டைச் சேர்ந்த பொன்மணி, நல்லமுத்து, ஆயிரம், ராமர், சிவா, லட்சுமணகுமார் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போதையில் இருந்த கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

இது குறித்து தச்சநல்லூர் போலீசார் கூறும்போது “புகார் வந்தவுடனே இச்சம்பவம் பற்றி விசாரணையில் இறங்கினோம். அதன் பேரில் ஆறு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேரையும் அடித்து அவர்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததையும் ஒப்புக் கொண்டனர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. அந்த விவகாரத்தையும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் தொடர் விசாரணை மேற்கொண்டு நடக்கிறது”என்றனர்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இரண்டு இளைஞர்கள் அளித்த புகாரையும் முதலில் போலீசார் ஏற்க மறுத்து விட்டதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் அச்சிட்ட லெட்டர் பேடில் புகார் மனு இருந்ததைப் பார்த்த பிறகே வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுவதுதான்.

இதனால்தான் இந்த வேதனை நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கழித்த பிறகே ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது, என்கிறார்கள்.

இது தொடர்பான செய்திகள் பிரபல தமிழ் டிவி சேனல்களில் மட்டும் இன்றி, தொடர்ந்து திமுக அரசை ஆதரித்து எழுதி வரும் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றிலும் பிரதான செய்தியாக வெளியாகி நாட்டையே குலுங்க வைத்துள்ளது.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் பட்டியலின மக்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் தமிழகத்தில் முதல் ஆளாக குரல் கொடுக்கும் விசிக தலைவர் திருமாவளவன் இதை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை போலிருக்கிறது.
அதனால் இதை அவர் கண்டு கொண்ட மாதிரி தெரியவும் இல்லை.

அதேபோல்தான், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பியும். சமூக நீதி பற்றி மேடைதோறும் முழங்கும் கனிமொழிக்கு இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

“வேங்கை வயல் கிராம துயரத்தை பொறுத்தவரை, இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரையும் திமுக அரசு கைது செய்யவில்லை. இதற்கான காரணத்தை திருமாவளவனோ, மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணனோ முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டதாக தெரியவில்லை.

அதே போல்தான் சேலம் திருமலைகிரி, நாங்குநேரி ஆகிய இடங்களில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி இவர்கள் இருவரும் வாய் திறந்ததாகவே தெரியவில்லை.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற சில வட மாநிலங்களில் பட்டியலின சமூக மக்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அதற்கு தமிழகத்தில் இருந்து
முதலில் ஓங்கி குரல் எழுப்புவோர் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மூவரும்தான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதேநேரம் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் இதுபோன்ற வன்கொடுமைகள் நடந்தால் இந்த மூவருமே கப்சிப் ஆகி விடுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால்
எந்த மாநிலத்தில் எல்லாம் பாஜக ஆட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக பொங்கியெழுந்து கண்டனம் தெரிவிப்பார்கள்.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்றால் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்படியொரு சம்பவம் நடந்ததா? என்று அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இது போன்ற பிரச்சனைகளில் ஜனநாயகத்தை பற்றி பேச அதிமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று மார்க்சிஸ்ட் இப்போது புலம்புகிறது. அது சரி அதிமுகவுக்கு தகுதி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். 1997-ல் மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை பட்டப் பகலில் வெட்டிக் கொன்ற திமுகவுடன் நீங்கள் எப்படி கூட்டணி வைத்துக் கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு மனசாட்சியுள்ள எந்த மார்க்சிஸ்ட் தோழராலும் பதில் கூற முடியாது. அதுபற்றி கேள்வி எழுப்பினால் வாயே திறக்க மாட்டார்கள். எங்களுக்கு நாடு தான் முக்கியம், பாஜகவை வீழ்த்துவது தான் எங்கள் ஒரே இலக்கு. அதற்காக திமுகவிற்கு எவ்வளவு சேவகம் வேண்டுமானாலும் செய்வோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் எதையும் கூற முடியாது என்று இந்த மூன்று தலைவர்களும் சொல்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் மற்றவர்களின் ஆட்சி என்றால் அதை ஊர்ஜிதப்படுத்துவதற்கு முன்பாகவே கேள்விப்பட்ட விஷயத்தை வைத்தே இவர்கள் கண்டனம் தெரிவித்தும் விடுவார்கள்.

நெல்லை பட்டியலின இளைஞர்கள், தாங்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் புகார் கூறியிருக்கின்றனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதைவிட கேவலமான ஒரு செயல் இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்திருக்குமா?… என்ற கேள்வியும் எழும். இளைஞர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இது திமுக அரசுக்கு நெருக்கடி தருவதை விட விசிக, மார்க்சிஸ்ட் தலைவர்களுக்குத்தான் பெரும் சோதனையாக அமையும். ஏனென்றால் பட்டியலின, விளிம்பு நிலை மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது அவர்கள் கட்சியின் தொண்டர்கள் நம்பகத்தன்மையை இழக்கும் நிலை வெகு விரைவிலேயே ஏற்படலாம்.

மேலும் தமிழக காங்கிரஸ் போலவே விசிவும், மார்க்சிஸ்ட்டும் திமுகவின் அடிமை கட்சிகளாக மாறிவிட்டன என்று சொந்த கட்சியினராலேயே முத்திரையும் குத்தப்படலாம். இது அந்த இரு கட்சிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்
பாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 236

0

0