ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஓகே… வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்..!!!

22 April 2021, 1:19 pm
sterlite - updatenews360
Quick Share

டெல்லி : ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, தொழில்சாலை தேவைகளுக்கு பயன்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைகளுக்கு திசைமாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு உள்ளது. இது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தற்போது மூடப்பட்டுள்ளது. மருத்துவ அவசர தேவையை உணர்ந்து, ஆக்சிஜன் அலகை இயக்க அனுமதிக்க வேண்டும். அப்படி இயக்கப்படும் பட்சத்தில் ஆக்சிஜனை இலவசமாக தயாரித்து வழங்குவோம், என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பதிலளித்தார். அதாவது, நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க அனுமதியளிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பதிலின் அடிப்படையில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பான மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 132

0

0