நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியா?…காங்.-திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 9:38 pm
CM Stalin -Updatenews360
Quick Share

கடந்த 7 மாதங்களாக திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் இலை மறைவு
காயாக இருந்த மோதல் பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்பும், கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாலும் தற்போது பகிரங்கமாகவே வெடித்துள்ளது.

திமுக – காங்., கூட்டணி அமையுமா?

அதுவும் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது
தேசிய அளவில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமையுமா? இல்லையா? என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்பிவிட்டு இருக்கிறது.

ஏனென்றால் அந்தத் திட்ட அறிக்கையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேகதாது அணை கட்டினால் காடுகள் அழிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கு இழப்பீடாக காடு வளர்க்க நிலம் கண்டறியப்பட்டு, அதை கையக்கப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

மேகதாது விவகாரம் : டெல்லி பறந்த அமைச்சர்

அதிலும் குறிப்பாக, சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பேசிய சூழலில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி சட்டப் பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மேகதாது அணைக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மிகுந்த ஆர்வம் காட்டுவது நிலைமையை இன்னும் பரபரப்பாக்கி விட்டுள்ளது.

இதனால் வருகிற 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த என்னென்ன வியூகங்கள் வகுக்கப்படும்?… அத்துடன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் ஏதாவது பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு உண்டா?… என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை

அதேநேரம் காங்கிரஸ் தலைமையோ முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் திராவிட
மாடல் ஆட்சி பற்றி தொடர்ந்து பேசி வருவதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது.

இதுவரை திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கு சிறந்த வழிகாட்டி என்று மட்டுமே பேசி வந்த ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், பேசும்போது “இன்றைக்கு நாடு போய்க் கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்கு துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக இன்று எப்படி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எந்த அளவிற்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ அதுபோன்றதொரு திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தேவை” என்று வலியுறுத்தினார்.

கதிகலங்கிய காங்கிரஸ்

இந்த பேச்சு காங்கிரஸ் தலைமையை கதி கலங்க வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதற்கு சில முக்கிய காரணங்களும் கூறப்படுகின்றன.

இது தொடர்பாக டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கூறும்போது, “கடந்த ஆண்டின் இறுதியில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் அதற்காக காங்கிரஸ் சில தியாகங்களை செய்யவேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதைக் கூட எங்கள் கட்சித் தலைமை ஒரு விதத்தில் ஏற்றுக்கொண்டு விட்டது. மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பிரதான கட்சிகளிடம் எம்பி சீட்டுகளை குறைத்து பெறுவதற்கு சம்மதமும் தெரிவித்தது. அப்படி இருந்தும் கூட ஸ்டாலின் போக்கில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதை சோனியா, ராகுல், கார்கே மூவரும் நன்கு புரிந்துகொண்டும் விட்டனர்.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசும் ஸ்டாலின் பாட்னா கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைமையில், மாநில கட்சிகள் ஒருங்கிணையவேண்டும் என பேசுவதையே தவிர்த்து வருகிறார்.

2019 மாதிரி 2024ல் ஸ்டாலின் இல்லையே?

2019 தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று எல்லா கட்சிகளுக்கும் முன்பாக முந்திக் கொண்டு திமுக அறிவித்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள மிகுந்த தயக்கம் காட்டி வருகிறது.

அதற்கு முக்கிய காரணம், மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், மத்திய அமைச்சரவையில் துணை பிரதமர் பதவி மற்றும் முக்கிய இலாகாக்களை திமுகவால் கேட்டு பெற முடியும் என்று ஸ்டாலின் கருதுவதுதான்.

தவிர திராவிட மாடல் ஆட்சி என்பது திமுக தலைமையிலான ஆட்சிதான் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு சொல்லப்பட்ட மறைமுக செய்தியாக உள்ளது.

கடுப்பான ராகுல் காந்தி

திமுக தலைமையில், மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் என்றால், பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் மாறுவதற்கு ஆசைப்படுகிறாரா? என, தமிழக காங்கிரஸ் எம்பி ஒருவரிடம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேட்டு தெரிந்துகொண்டு அதை கார்கே, ராகுல் இருவருக்கும் ஸ்டாலின் பேசிய பேச்சின் உள்ளர்த்தம் குறித்து விளக்கியும் இருக்கிறார். அதாவது ஸ்டாலினுக்கு பிரதமர் பதவி மீதும் ஒரு கண் இருக்கிறது என்பதை அவர் போட்டு உடைத்துள்ளார்.

இதைக்கேட்ட கார்கேவும், ராகுலும் ஸ்டாலின் பேச்சை ரசிக்கவில்லை. இருவரும் தங்கள் அதிருப்தியை வேணுகோபாலிடம் வெளிப்படுத்தியும் உள்ளனர்”
என்று அந்த தலைவர்கள் ஆவேசமாக குறிப்பிட்டனர்.

திருமாவை திசைதிருப்பும் காங்கிரஸ்

இந்த நிலையில்தான் மேகதாது அணை விவகாரத்தை வைத்து பெங்களூருவில் வருகிற 17ம் தேதி நடைபெறும் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் பாட்னா ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் அழைப்பு தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாத நிலையில் திருமாவளவன் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

“காங்கிரஸ்-திமுக இடையே எழுந்துள்ள இந்த இரட்டை சிக்கல் நீடித்தால் தமிழகத்தில் இந்தக் கூட்டணி முறியும் நிலைதான் ஏற்படும்” என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

கூட்டணி முறியும் அபாயம்

“ஏனென்றால் 2024 தேர்தலின்போது காங்கிரசுக்கு தமிழகத்தில் 5 எம்பி தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிக் கொடுத்துவிட்டு குறைந்த பட்சம் 32 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திமுக விரும்புகிறது.

மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைந்தால் அப்போது பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை பெறுவதற்கு இந்த வெற்றி உதவும் என்றும் அறிவாலயம் கணக்கு போடுகிறது. ஆனால் காங்கிரசோ தங்களுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று திமுகவிடம் இப்போதே மல்லுக்கட்டி வருகிறது.தொடர்ந்து மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி எம்பி சீட்டுகளை மிகக் குறைந்த அளவில் திமுக அளிக்க முன் வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற முடிவுக்குத்தான் காங்கிரஸ் மேலிடம் வரும்.

தாங்கள் கூட்டணியில் இல்லாமல் 2024 தேர்தலில் திமுகவால் ஒரு எம்பி சீட்டை கூட ஜெயிக்க முடியாது என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும். மேலும் தமிழகத்தில் நான்கைந்து தொகுதிகளுக்கு கையேந்துவதை விட கர்நாடகாவில் அதிக கவனம் செலுத்தினால் அந்த மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என்பதால் காங்கிரஸ் அதற்கே முன்னுரிமை அளிக்கும்.

மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் போட்ட உத்தரவு

அதேநேரம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும்போது, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் காங்கிரஸ் தன்னுடன் அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதற்கு அச்சாரம் போடும் வகையில்தான் பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள விசிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு,ஈவிகே எஸ் இளங்கோவன், செல்வப் பெருந்தகை போன்ற தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுக அரசையும் புகழ்ந்தோ, பாராட்டியோ பேசக்கூடாது, இனி அடக்கி வாசிக்க வேண்டும் என்ற உத்தரவையும் காங்கிரஸ் மேலிடம் பிறப்பித்து இருக்கிறது, என்கிறார்கள்.
இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி முறியும்போது இவர்களின் பாடுதான் படுதிண்டாட்டமாகிவிடும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது நடந்துவிட்டால் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்களது தலைமையில் தனித்தனியே கூட்டணி அமைத்து தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது நிச்சயம்!

Views: - 245

0

0