கரும்புக்கு அறிவித்ததோ ரூ.33… கொடுப்பதோ ரூ.15 ; கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடு ; வேடிக்கை பார்க்க மாட்டோம்… இபிஎஸ் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
5 January 2023, 2:12 pm

சென்னை : செங்கரும்பு கொள்முதல்‌ செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும்‌ விவசாயிகளிடம்‌ நேரடியாகச்‌ சென்றடைய வேண்டும் என்று திமுக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2023-ஆம்‌ ஆண்டு தைப்‌ பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும்‌ என்ற எண்ணத்துடன்‌ விவசாயிகள்‌ அதிக அளவில்‌ செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர்‌.

இந்நிலையில்‌, பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்படமாட்டாது என்று இந்த விடியா அரசு அறிவித்ததையொட்டி, வருகின்ற தைப்‌ பொங்கலுக்கு, அம்மாவின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ வழங்கியதைப்‌ போல்‌, குடும்ப அட்டைதாரர்கள்‌ அனைவருக்கும்‌ முழு செங்கரும்பு வழங்க வேண்டும்‌ என்றும்‌, செங்கரும்பை விவசாயிகளிடம்‌ நேரடியாகக்‌ கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌, இல்லையெனில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்படும்‌ என்று நான்‌ அறிக்கை வெளியிட்டிருந்தேன்‌.

அதேபோல்‌, செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள்‌, தாங்கள்‌ விளைவித்த செங்கரும்பை கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌ என்று விடியா திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில்‌ பல மாவட்டங்களில்‌ போராட்டங்களை நடத்தினர்‌.

இந்த விடியா அரசு எங்களது தொடர்‌ கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும்‌ என்று அறிவித்தது. மேலும்‌, ஒரு கரும்பு 33 ரூபாய்‌ வீதம்‌ 2.19 கோடி கரும்புகள்‌ கொள்முதல்‌ செய்வதற்காக 72 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்‌ அரசு தரப்பில்‌ தெரிவிக்கப்பட்டது.

ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய்‌. ஆனால்‌, இப்போது மாநிலம்‌ முழுவதும்‌ அதிகாரிகளும்‌, இடைத்தரகர்களும்‌ இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல்‌ 18 ரூபாய்‌ வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும்‌, கரும்பு கொள்முதலில்‌ பெரிய முறைகேடுகள்‌ நடைபெறுவதாகவும்‌ செய்திகள்‌ வருகின்றன.

செங்கரும்பு கொள்முதலில்‌ நடைபெறும்‌ முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத்‌ தடுத்து நிறுத்த வேண்டும்‌ என்றும்‌, அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33/- ரூபாய்‌ முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்துகிறேன்‌.

அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும்‌ விவசாயிகளைச்‌ சென்றடையாவிடில்‌, பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள்‌ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்‌ என்றும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்படும்‌ என்றும்‌, இந்த விடியா அரசை எச்சரிக்கை செய்கிறேன்‌.

கரும்பு கொள்முதலில்‌ கமிஷன்‌ அடிக்கும்‌ நோக்கத்தோடு அதிகாரிகள்‌ செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற விடியா திமுக அரசின்‌ விவசாய விரோத செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!