ஆட்சியை தீர்மானிக்கும் 2 கோடி ஓட்டுகள்? கட்சிகள் போடும் அரசியல் கணக்கு
8 April 2021, 7:29 pmநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம். பதிவான வாக்குகளின் சதவீதம் 72.78 ஆகும்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 4 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தனர். இது 74.81 சதவீதம் ஆகும்.
இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சமாக அதிகரித்த போதிலும் ஓட்டு சதவீதம் 72.78 ஆக குறைந்து உள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலைவிட இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 22 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க அதிமுகவும், எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டுமென்று திமுகவும் பலத்த போட்டியில் இறங்கியுள்ளன.
இதுதவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக-தேமுதிக கூட்டணி என்று மேலும் மூன்று அணிகள் களத்தில் உள்ளன.
தேர்தலில் எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் என்பது தெரிய வந்தவுடன் அதிமுக, திமுக,
மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகியவை பல்வேறு அரசியல் கணக்குகளை போடத் தொடங்கி விட்டன.
2016 தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து களம் கண்ட அதிமுக 136 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு அப்போது கிடைத்த மொத்த ஓட்டு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்ட திமுக கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரம்.
2021 தேர்தலில் சுமார் 22 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதால், கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற 1 கோடியே 76 லட்சம் ஓட்டுகளுடன் இதையும் சேர்த்தால் 2 கோடி வாக்குகளுக்கு நெருக்கமாக வருகிறது. எனவே. அதிமுகவோ அல்லது திமுகவோ ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்றால் பதிவான வாக்குகளில் குறைந்த பட்சம் 2 கோடி ஓட்டுகளை பெற்று விட்டால்150 தொகுதிகளில் எளிதில் வென்று அரியணை ஏற முடியும் என்பது அரசியல் நிபுணர்கள் கூறும் புள்ளி விவரம்.
ஒருவேளை இருமுனைப் போட்டி நிலவி இருந்தால் அப்போது குறைந்த பட்சம் 2 கோடியே
29 லட்சம் பெறும் அணிதான் 150 தொகுதிகளுடன், ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது 5 முனை போட்டி நிலவுவதால், 1 கோடியே 90 லட்சம் வாக்குகளைப் பெறும் கட்சி கூட 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பு நிறையவே உண்டு.
அதன்படி பார்த்தால் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே இந்த அளவில் வாக்குகளை பெறுவதற்கான சாத்தியக் கூறு உள்ளது.
மூன்றாம் இடத்துக்கு மோதும் 3 அணிகளில் ஏதாவது ஒரு அணி 10 சதவீத வாக்குகளை பெற்று விட்டால், இந்த ஒரு கோடியே 90 லட்சம் ஓட்டு என்பது ஒரு கோடியே 85 லட்சம் வாக்குகளாக குறையலாம். அதற்கு சற்று சரிந்தாலும் கூட அதிமுக அல்லது திமுக கூட்டணியால் 160 முதல்
170 இடங்களை கைப்பற்ற முடியும். முதல் அணிக்கும் இரண்டாவது அணிக்கும் இடையேயான வித்தியாசம் 3 அல்லது 4 சதவீதத்தை கடந்துவிட்டால் முதலிடம் பிடிக்கும் அணி அதிகபட்சமாக 180 இடங்கள் வரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் உண்டு.
ஆனால் இந்தத் தேர்தலில் அது போல் நடப்பதற்கான அறிகுறி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இது பற்றி ஒரு அரசியல் கணக்கு. இது100 சதவீத வாக்குபதிவுக்கானது, அல்ல. இந்த தேர்தலில் பதிவான 72.78 விழுக்காடு மட்டுமே கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை மொத்தம் பதிவான வாக்குகளில் 13 சதவீதத்தை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக கூட்டணி, சுயேச்சைகள் மற்றும் நோட்டா பங்கு போட்டுக் கொள்ளும் என்று நம்புகிறது. எஞ்சிய 60 சதவீதத்தில் கடந்த காலத்தில் அதிமுக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 25%, மற்றும் பாமகவுக்கு 3.5%, பாஜகவுக்கு 2.5% மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அரை சதவீதமும் என குறைந்தபட்சம் 31.5 விழுக்காடு ஓட்டுகள் கிடைக்கும் என மதிப்பிடுகிறது.
இதன்படி பார்த்தால் 60 சதவீதத்தில் எதிர் அணியான திமுக கூட்டணியால் 28.5 சதவீத வாக்குகளே பெற முடியுமென்று அதிமுக உறுதியாக நம்புகிறது. இந்த 2 சதவீத வித்தியாசம் மூலம் 150 இடங்கள் வரை கைப்பற்றிவிட முடியும் என அதிமுக தலைமை கணக்கு போடுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மற்றும் தற்போது அமைத்துள்ள கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கு போடுகிறது. அதன்படி, தனது கூட்டணிக்கு எஞ்சிய 60 சதவீதத்தில் குறைந்த பட்சம் 34 சதவீத ஓட்டுகள் வரை கிடைக்கும் என்றும் அதிமுகவால் அதிக பட்சமே 26 சதவீத வாக்குகளே மட்டுமே பெற முடியும் என்று திமுக நம்புகிறது.
இந்த 8 சதவீத வித்தியாசத்தின் மூலம் 180 இடங்கள் வரை கைப்பற்றி விடலாம் என திமுக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணக்கு போடுகிறார். ஒருவேளை மூன்றாவது இடத்துக்கு மோதும் 3 அணிகள், சுயேச்சைகள், நோட்டா போன்றவை பதிவான 73 சதவீத ஓட்டுகளில்14 விழுக்காட்டை பெற நேர்ந்தால் கூட 170 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடித்து விடலாம் என்று திமுக உறுதியாக நம்புகிறது.
மூன்றாவது அணிகளைப் பொறுத்தவரை அவை மூன்றுமே கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
54 லட்சம் வாக்குகள் பெற்றன. இந்த சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை இந்த மூன்று அணிகளும் 70 லட்சம் வாக்குகள் வரை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக-தேமுதிக கூட்டணி, 4 முதல் 6 இடங்களில் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த அணிகளுக்கு கிடைக்கிற வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மே 2-ந்தேதி ஓட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்கும் போதுதான் தெரியவரும். இருந்தாலும் இந்த மூன்று அணிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான 2 கோடி ஓட்டுகள் என்னும் இலக்குக்கு வெகு தொலைவில் உள்ளன என்பதே நிஜம்.
0
0