‘இதோ அமைச்சர் வந்துவிட்டார்’… செந்தில் பாலாஜியை தடம் புரள வைக்கும் தடகளம்…?

Author: Babu Lakshmanan
7 August 2023, 9:28 pm
Quick Share

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே அறுபத்தி நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால் லஞ்ச வழக்கு மற்றும் அவருடைய தம்பி அசோக்குமார் கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி வருவதாக கூறப்படும் ஆடம்பர பங்களாவிற்கு எந்த வகையில் பணம் வந்து சேர்ந்தது? என்பதில் மட்டுமே தீவிரம் காட்ட முடியும்.

மற்றபடி டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கட்டாய வசூல், அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட பார்களுக்கு மது விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடு மூலம் கோடி கோடியாய் சம்பாதித்த பணம் யாருக்கு, எப்படிச் சென்றது என்பன போன்றவை குறித்தெல்லாம் எந்தத் தகவலையும் அமலாக்கத்துறையால் கறக்க முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் அதனை தங்களது ஐந்து நாள் விசாரணையில் அமலாக்கத்துறை எளிதில் வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறும் சட்ட நிபுணர்களும் உண்டு.

இது ஒருபுறம் இருக்க சிறையில் உள்ள நிலையிலும் செந்தில் பாலாஜி தொடர்பாக எழும் சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை.

முதலில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதை உடனடியாக ஏற்கவில்லை. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்து பின்னர் சர்ச்சைக்கு உள்ளானதும் அந்த முடிவை நிறுத்தி வைத்தார். இதனால் இலாகா இல்லாத அமைச்சராகவே இன்று வரை செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார்.

அதன்பின்பு அவருக்கு புழல் சிறையில் ராஜ உபசரிப்பு அளிக்கப்படுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே தினமும் சிறைக்கு சென்று செந்தில் பாலாஜிக்கு என்னென்ன தேவையோ அதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருகிறார் என்றும் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இன்னும் சிலர் பெங்களூரு
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சுகவாசியாக இருந்தது போல் சிறையில் நாட்களை மிகுந்த மகிழ்ச்சியாக செந்தில் பாலாஜி கழித்து வருகிறார் என்று ஒப்பீடும் செய்தனர்.

ஆனால் அப்படியெல்லாம் எந்த சலுகையும் செந்தில் பாலாஜிக்கு காட்டப்படவில்லை, காவல்துறை அதிகாரியும் அவரை சந்திக்கவில்லை என்று சிறைத்துறை மறுத்தது.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் கரூர், நாமக்கல், கோவை, வேடசந்தூர் ஆகிய நகரங்களில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர் வீடுகள் அலுவலகங்கள் என ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் திடீர் ரெய்டு நடத்தியது.

குறிப்பாக விசாரணையின்போது, ​​செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சாமிநாதன், குற்றவியல் ஆவணங்கள், வருமானங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை மறைக்கவும் பரிமாற்றம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து,வேடசந்தூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சாமிநாதனின் உறவினரான சாந்தி என்ற பெண் அவருடைய பினாமியாக செயல்பட்டதும், ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய பைகளை அவர் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

விசாரணையின் அடிப்படையில், சாந்தியிடம் கைப்பற்றப்பட்ட சொத்து மற்றும் பணம் சாமிநாதனுக்கு சொந்தமானது என்றும் அமலாக்கத்துறை அறிவித்தது.

தவிர இந்த சோதனையின்போது என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து, அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “வேலை வாய்ப்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி எம்எல்ஏவுக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் கடந்த 3ம் தேதி சோதனை நடத்தப்பட்டபோது
22 லட்சம் ரொக்கம், கணக்கில் வராத 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள், 60 நில சொத்து ஆவணங்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது” என்றும் தெரிவித்தது.

இதில் பறிமுதல் செய்த ரொக்கம், விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்களை விட பலருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்த இன்னொரு விஷயம் செந்தில் பாலாஜி பற்றி குறிப்பிடும்போது அவரை ஒரு எம்எல்ஏ என்று அமலாக்கத்துறை
அடையாளப்படுத்தி இருந்ததுதான்.

இதை யார் கூர்ந்து கவனித்தார்களோ இல்லையோ, திமுகவினர் மிக உன்னிப்பாக படித்து பார்த்து இருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் அவர்கள் கோபத்தில் கொந்தளிக்கவும் செய்தனர்.

“அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கைது செய்ததுமே அவரிடம் இருந்த இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டன. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். அப்படி இருக்கும்போது அவரை அமைச்சர் என்று கூறாமல் திட்டமிட்டு அவமதிக்கும் வகையில் எம் எல் ஏ என்று அமலாக்கத்துறை
குறிப்பிட்டு இருக்கிறது” என திமுக நிர்வாகிகள் சீறுகின்றனர்.

அதேநேரம், அமலாக்கத்துறையை மறை முகமாக கிண்டலும் கேலியும் செய்வதுபோல மாநில தடகள சங்கத்தினர் பெயரில் ஒரு நூதன அழைப்பிதழை அச்சிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் அவர்கள் விநியோகம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் கரூரில் நடைபெறும் ஈட்டி எறிதல் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனமும் பங்கேற்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அமைச்சரோ நீதிமன்ற காவலில் இருக்கிறார், அவர் எப்படி ஈட்டி ஏறிதல் போட்டியில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியும்?…என்ற சட்ட சிக்கலான ஒரு கேள்வியும் இதனால் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜியை எம்எல்ஏ என்று குறிப்பிட்ட அதே நாளில்தான் தமிழ்நாடு தடகள சங்கத்தின் அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் மாநில தடகள சங்கமே விழாவின் சிறப்பு விருந்தினராக செந்தில் பாலாஜி பங்கேற்பார் என்று கூறியிருப்பதால் கோர்ட்டு உத்தரவையும் மீறி அவரை திமுக அரசு, அவசர அவசரமாக விடுதலை செய்து விட்டதா?… என்று கேள்வியை எழுப்பாதவர்களே கிடையாது.

இந்த அழைப்பிதழின் நகலை தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார்.

அந்த பதிவில் “புழல் சிறையில் இருக்கிற செந்தில் பாலாஜியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம். குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அழைத்ததே தவறு என்கிற நிலையில், எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல, இதில் திமிர்த்தனமான மற்றும் கேவலமான விஷயம் என்னவென்றால், இந்த விழாவில் கலந்துகொள்ளும் மற்றொரு சக முதன்மை விருந்தினர் வேறு யாருமல்ல, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தான்.
இது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

இனி சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்த இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். எனவே தமிழக போலீஸ் டிஜிபி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிடவேண்டும்.

முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம் இந்த தடகள சங்கத்தின் தலைவர். தவிர முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி கே ராஜேந்திரன் இந்த சங்கத்தின் துணைத் தலைவர். சிறையில் இருக்கிற ஒருவர் வெளியே வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது குறித்து இவர்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது தெரிந்தே அனுமதித்துள்ளார்கள் என்றால்
அது கேவலமானதும், வெட்கப்பட வேண்டியதும் ஆகும். மேலும் தமிழகத்தின் அரசியல் அவலத்தை உணர்த்துவதோடு, அவர்களின் தலைமை பண்பையும் கேள்விக்குறியாக்கும்” என்று கண்டித்து இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு வெளியே இருப்பதுபோல அழைப்பிதழை தமிழ்நாடு தடகள சங்கம் அச்சடித்திருப்பதாக கூறப்படுவது கரூர் மாவட்ட திமுகவினருக்கு வேண்டுமென்றால் சந்தோசமான விஷயமாக இருக்கலாம். ஆனால் இதில் சட்ட ரீதியான பிரச்சினைகளும் இருக்கின்றன.

தங்களிடம் அனுமதியை வாங்கிவிட்டு சிறையில் உள்ள அமைச்சர் பெயரை கரூர் மாவட்ட தடகள சங்கத்தினர் சேர்த்துவிட்டார்கள் என்று மாநில தடகள சங்கம் மறுக்கவும் செய்யலாம்.

அதனால் மாவட்ட அளவில் இந்த அமைப்பில் உள்ளவர்களே தங்கள் மாவட்ட அமைச்சரை கௌரவப்படுத்தும் நோக்கத்துடன் இப்படி அழைப்பிதழ் அடித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எப்படிப் பார்த்தாலும் இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மட்டுமல்ல திமுகவினருக்கும், திமுக தலைமைக்கும் இந்த வினோத அழைப்பிதழ் தலைவலியைத்தான் தரும்.

அதுவும் செந்தில் பாலாஜியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் இதுபோன்ற அழைப்பிதழ்களை அச்சிட்டு விநியோகம் செய்வது செந்தில் பாலாஜி மீது தமிழக மக்களிடம் எந்த விதத்திலும் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. மேலும் இப்போதைக்கு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலை ஆவாரா? என்பதும் சந்தேகம்தான்” என்று அரசியல் பார்வையாளர்கள்
கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 340

0

0