தமிழக மீனவர் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதா..? நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
27 January 2022, 12:53 pm
Quick Share

சென்னை : தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் விளம்பரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில்‌ கைப்பற்றப்பட்ட விசைப்‌ படகுகளை தமிழக மீனவர்களுக்குத்‌ திருப்பித்‌ தராமல்‌ தன்வசம்‌ வைத்திருந்த இலங்கை அரசு, அந்தப்‌ படகுகளை அடுத்த மாதம்‌ ஏலம்‌ விடப்போவதாக செய்தித்தாள்களில்‌ விளம்பரப்படுத்தியிருப்பது கைப்பற்றப்பட்ட படகுகள்‌ திருப்பிக்‌ கிடைக்கும்‌ என்று எண்ணிக்‌ கொண்டிருந்த இந்திய மீனவர்களை பெருத்த ஏமாற்றத்தில்‌ தள்ளியுள்ளது.

இலங்கை அரசால்‌ வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில்‌, யாழ்ப்பாணம்‌ மாவட்டத்திலுள்ள காரைநகரில்‌ 65 படகுகள்‌ 07-02-2022 அன்றும்‌, காங்கேசன்துறையில்‌ 5 படகுகள்‌ 08-02-2022 அன்றும்‌, கிளிநொச்சி, மாவட்டத்தில்‌ உள்ள கிராஞ்சியில்‌ 24 படகுகள்‌ 09-02-2022 அன்றும்‌, மன்னார்‌ மாவட்டத்தில்‌ உள்ள தலைமன்னாரில்‌ 9 படகுகள்‌ 10-02-2022 அன்றும்‌ புத்தளம்‌ மாவட்டத்தில்‌ உள்ள கல்பிட்டியில்‌ 2 படகுகள்‌ 11-02-2022 அன்றும்‌ என மொத்தம்‌ 105 படகுகள்‌ ஏலத்திற்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படையின்‌ கட்டுப்பாட்டில்‌ இருந்த இந்த மீன்பிடிப்‌ படகுகள்‌ நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல்‌ இருந்ததால்‌ பழுதுற்ற பொருள்‌’ என்பதன்‌ அடிப்படையில்‌ அடிமாட்டு விலைக்கு ஏலத்திற்கு விடப்பட இருக்கின்றன.

ஏற்கெனவே இலங்கை கடற்படையினரின்‌ அச்சுறுத்தல்‌, கொரோனா தொற்று நோய்‌ பாதிப்பு என பல்வேறு காரணங்களால்‌ வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, என்றாவது ஒரு நாள்‌ படகுகள்‌ கிடைக்கும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த மீனவர்களுக்கு இலங்கை அரசின்‌ இந்த அறிவிப்பு வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவது போல்‌ உள்ளது. இலங்கை அரசின்‌ இந்த அறிவிப்பு இயற்கை நியதிக்கு எதிரான செயல்‌. மீனவர்களின்‌ பெயர்களில்‌ உள்ள படகுகளை ஏலம்‌ விடுவதற்கு இலங்கை அரசிற்கு எந்த உரிமையும்‌ இல்லை, சட்டப்படி எந்த அதிகாரமும்‌- இல்லை.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம்‌ கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும்‌ என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில்‌, மத்திய அரசும்‌ இலங்கை அரசிற்குத்‌ தேவையான அழுத்தத்தைக்‌ கொடுத்து அவற்றை திரும்பப்‌ பெறுவதற்குத்‌ தேவையான நடவடிக்கையை எடுத்து வந்த நிலையில்‌, இந்திய மீனவர்களின்‌ பெயர்களில்‌ உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போலவும்‌ உள்ளது. இலங்கை அரசின்‌ இந்தச்‌ செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இலங்கை அரசின்‌ இந்த அறிவிப்பு மீனவ மக்களின்‌ வாழ்வாதாரத்தை சிதைப்பது போலவும்‌, படகுகள்‌ திரும்பிக்‌ கிடைக்கும்‌ என்று எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின்‌ நம்பிக்கையை குலைப்பது போலவும்‌ அமைந்துள்ளது. இலங்கை அரசின்‌ இந்த ஏல அறிவிப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‌ என்பதும்‌, அவைகள்‌ அனைத்தும்‌ உரியவர்களிடம்‌ திருப்பித்‌ தரப்பட வேண்டும்‌ என்பதும்‌, நல்ல நிலையில்‌ இல்லாத படகுகள்‌ சரி செய்யப்பட்ட பிறகு உரியவர்களிடம்‌ ஒப்படைக்கப்பட வேண்டும்‌ என்பதும்‌ மீனவப்‌ பெருமக்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இலங்கை அரசின்‌ செயலை மத்திய அரசு தடுக்காவிட்டால்‌ பிப்ரவரி இரண்டாம்‌ தேதி முதல்‌ வேலை நிறுத்தத்தில்‌ ஈடுபடப்‌ போவதாக இராமேஸ்வரம்‌ மீனவர்கள்‌ சங்கம்‌ அறிவித்துள்ளது. இதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக எடுக்க வேண்டிய பொறுப்பும்‌, கடமையும்‌ தமிழ்நாடு அரசிற்கும்‌ உண்டு.

இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களுக்கு விரிவாக கடிதம்‌ எழுதியுள்ளார்‌ என்றாலும்‌, ஏலத்திற்கு இன்னும்‌ பதினைந்து நாட்கள்‌ கூட இல்லாத நிலையில்‌, மத்திய அரசுடன்‌ தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக்‌ கொடுத்து, படகுகள்‌ ஏலம்‌ குறித்த விளம்பரம்‌ இலங்கை அரசால்‌ ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்படவும்‌, அவற்றை உரியவர்களிடம்‌ ஒப்படைக்கும்‌ வகையில்‌ இலங்கை நாட்டிடமிருந்து திரும்பப்‌ பெறப்படவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 457

0

0