புதுச்சேரி, கேரளாவில் சுமூகம்… தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை பரபரப்பாக்குவது ஏன்..? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 7:32 pm
Quick Share

கோவை ; திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ’21-ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயார்படுத்துவது’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி, தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும், அதன் நிறுவனர் டாக்டர்.அவிநாசிலிங்கம் அவர்களுக்கும், எனது நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும்.

பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது ஆய்வில் தெரியவந்தது. பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது, எனக் கூறினார்.

இந்நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது ;- திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதுச்சேரியிலும் உள்நோக்கத்தோடு, இதே போல் ஒரு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு வருத்தத்திற்குரிய ஒன்று. தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை உரிய பரிசோதனைக்கு பிறகு வழங்கப்பட வேண்டும்’ என கூறினார்.

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து பேசிய அவர், வன்முறை இல்லாத அமைதியான சூழல்தான் இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ‘தமிழ்நாட்டில் கலாச்சாரத்தை மாற்றும் சூழல் பெருகி வருகிறது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதிக கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதன் அடையாளங்களை யாரும் மாற்ற வேண்டாம். கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பட்டு அவரவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் கடனுதவி திட்டங்களில் பழங்குடியினருக்கும், பட்டியலினத்தவருக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆடைகளை குறைப்பது அறிவாற்றல் ஆகாது. அறிவை வளர்ப்பது தான் அறிவாற்றல் ஆகும் என மாணவிகளிடம் பேசியுள்ளேன். ஆர்எஸ்எஸ் என்பது தேசியவாத அமைப்பு. புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ்ஸின் பேரணி அமைதியாக நடந்தது. அதே நேரத்தில் மனித சங்கிலியும் அமைதியாக நடந்தது. கேரள மாநிலத்திலும் இதே போல் நடந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதை ஏன் பரபரப்பாக்குகிறார்கள் என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் பறந்து பட்ட எண்ணத்தோடு செயல்பட வேண்டும்,’ என தெரிவித்தார்.

அவரது தந்தை தனியாக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அவரை பார்த்துக்கொள்ள தயாராக இருந்த போதும், சுய விருப்பத்தால் அவர் தனியாக இருப்பதாக கூறினார்.

Views: - 365

0

0