தமிழகத்தில் இன்று தளர்வுகளுடன் தொடங்குகிறது 11-வது ஊரடங்கு…!!

1 December 2020, 6:58 am
cm announce - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்துக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு வகுப்புகளை 7ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க இதுவரை 10 முறை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 10வது ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30ம் தேதியுடன்அமுடிவடைந்தது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, 11வது ஊரடங்கு உத்தரவை பல்வேறு தளர்வுகளுடன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 30ம் தேதிவரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர்கள்,மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் நான் கலந்தாலோசனை செய்தேன்.

தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும், தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் இம்மாதம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், தொற்றின்தன்மையை கருதியும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பிட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப,பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் இம்மாதம் 7ம் தேதிமுதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு
மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1ம் தேதி முதல் 31ம் தேதிவரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 29

0

0