திமுக அரசை திணறடிக்கும் கிளாம்பாக்கம்! தென் மாவட்ட பயணிகள் படாதபாடு!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 7:14 pm
DMK
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலினால் கடந்த மாதம் 30 ம் தேதி அவசர அவசரமாக தொடங்கி வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திமுக அரசுக்கு பல்வேறு விதங்களில் குடைச்சலை கொடுப்பதாக அமைந்து விட்டது என்றே சொல்லவேண்டும். முதலில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ம் தேதிதான் இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு பதினாறு நாட்கள் முன்கூட்டியே தொடங்கி வைக்கப்பட்டு விட்டது.

கோயம்பேடு பஸ் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் 88 ஏக்கர் பரப்பில் சுமார் 400 கோடி ரூபாய் செல்வில் சென்னையின் புறநகரான வண்டலூர் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ளது, கிளாம்பாக்கம் பஸ் நிலையம்.

2019-ம் ஆண்டு அதிமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்து தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை,செங்கோட்டை,  காரைக்குடி போன்ற நகரங்களுக்கு சேவை வழங்குவதற்காக இது கட்டப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 2,130 அரசு பஸ்கள், மற்றும் 840 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 130 அரசு பஸ்களையும் 85 தனியார் பஸ்களையும் இங்கிருக்கும் 14 நடை மேடைகளில் நிறுத்த முடியும்.
அத்துடன் 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இருக்கிறது.

நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில்,
இலவச அவசர சிகிச்சை மையம், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான தங்கும் விடுதிகள், கடைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என கழிப்பறை வசதிகளும் உண்டு.

என்னதான் உலகத் தரத்திற்கு இணையான பஸ் நிலையம் என்று கிளாம்பாக்கம் அழைக்கப்பட்டாலும் கூட பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளை கையாளுவதில் திமுக அரசு சரியான திட்டமிடலை உருவாக்கவில்லை, அதில்
பல குறைபாடுகள் உள்ளன என்ற மனக்குமுறல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளிடம் பரவலாக காணப்படுகிறது.

அது மட்டுமின்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்படுத்திய குழப்பங்களும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் தென் மாவட்ட பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வழியாக பயணித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இங்குள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்திற்கும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிலையத்திற்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை கடப்பதற்கு கடந்த 12ம் தேதி இரவு வரை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கைக்குழந்தைகள், சிறு வயதினர், முதியோர், உடல் நலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், அதிக லக்கேஜுடன் வந்தவர்கள் என அத்தனை தரப்பினரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் டிவி செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் திமுக அரசை கழுவி கழுவி ஊற்றிய பின்பே கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டு இந்த இரு பஸ் நிலையங்களுக்கும் இடையே மினி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கினர்.

இதைவிட வேதனையான விஷயம் என்னவென்றால் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சென்று ஏறும்படியும், சாதாரண அரசு பஸ்களில் செல்ல விரும்புவோர் வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிக்கும் படியும் கேட்டுக்கொண்டதுதான். இதையும் கூட போக்குவரத்து கழக அதிகாரிகள் கடைசி நேரத்தில் அறிவித்து இருக்கிறார்கள்.

இதனால் முன்பதிவு செய்து கோயம்பேட்டில் பஸ் ஏற வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் உரிய நேரத்தில் கிளாம்பாக்கம் போக முடியாமல் பஸ்களை தவறவிட்டு பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல இயலாமல் கோபத்துடன் மீண்டும் தங்கள் வீட்டுக்கே திரும்பும் நிலையும் ஏற்பட்டது.

அதேநேரம் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் வந்தவர்களுக்கும் சாதாரண அரசு பஸ்களில் வெளியூருக்கு செல்லும் எண்ணம் உடனடியாக கைகூடவில்லை. ஐந்தாறு மணி நேரத்திற்குப் பின்பே முண்டியடித்துக் கொண்டு பஸ் ஏறும் அவல நிலைதான் அவர்களுக்கு கிடைத்தது.

பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் உணவோ, தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கோ டீ, காபி குடிப்பதற்கோ அதிக பணத்தை செலவிட வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டனர். அதற்கும் கூட அவர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைதான் ஏற்பட்டது.

ஆனால் கோயம்பேட்டில் பயணிகளுக்கு எப்போதும் இது போன்றதொரு இக்கட்டான நிலை ஏற்பட்டதில்லை. அங்கு 50க்கும் மேற்பட்ட டீக்கடைகளும், சிறு சிறு ஹோட்டல்களும் இருந்ததால் டீ காபி, பால் அதிக பட்சமாக பதினைந்து ரூபாய்க்கும், புளி சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை 30 ரூபாய்க்கும் கிடைக்கும்.

ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அதுபோல பெருமளவில் தேநீர் கடைகளோ, சிறு சிறு ஹோட்டல்களோ இல்லாததால் அங்கிருந்த ஒரு சில கடைக்காரர்கள் நிர்ணயித்த அதிக விலைக்கே வாங்க வேண்டிய கட்டாயமும் பயணிகளுக்கு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் வடசென்னை பகுதியில் வசிக்கும் தென் மாவட்டக்காரர்கள் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வருவதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டிய நிலை இருந்தது. இதனால் வெளியூர் செல்லும் பயணத்திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு உருவானது.

இந்த நிலையில்தான் கோயம்பேடு பஸ் நிலையம், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது இன்னொரு சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்திலும், அதனை சுற்றியுள்ள வெளிப் புற பகுதிகளிலும் சிறு சிறு ஹோட்டல்கள்,கையேந்தி பவன்கள், பேன்சி ஸ்டோர்கள், மளிகை, ஜெராக்ஸ் கடைகள் வைத்திருப்போர், நடைபாதை பழக்கடை வியாபாரிகள், பூ விற்பனை செய்யும் பெண்கள், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது அன்றாட வருவாயில் 75 சதவீதம் வரை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர்களில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இவர்களால் இனி கிளாம்பாக்கம் பஸ் நிலையப் பகுதிகளுக்கு சென்று தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வதும் கடினமான காரியம்.

“எங்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 ஆயிரம் குடும்பங்களுக்கும் மேல் இருக்கின்றன. எங்களது வாழ்வாதாரத்தை திமுக அரசு முற்றிலுமாக சிதைத்து விட்டது” என்று இவர்கள் டிவி செய்தி சேனல்களில் கொந்தளித்து வருவதை காணவும் முடிகிறது. இதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் 2002 ம் ஆண்டு வரை சென்னை பாரிமுனையில் இருந்த அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில்தான் செயல்பட்டு வந்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதை கோயம்பேட்டிற்கு மாற்றினார். அப்போது கூட இந்த அளவிற்கு, வியாபாரிகள் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் சென்னை பாரிமுனைக்கும், கோயம்பேடுக்கும் இடையே 11 கிலோமீட்டர் தூரம்தான். ஆனால் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு இடையான தூரமோ 35 கிலோமீட்டராக உள்ளது.

“திமுக அரசு ஒன்று செய்யலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள் கடைகள், சிறு உணவகங்கள் நடத்தி வந்தவர்களுக்கு கிளாம்பாக்கம் மாநகர பேருந்துகள் நிறுத்தும் பகுதிகளிலும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிற்கும் இடங்களிலும் முன்னுரிமை அளித்து அவர்கள் தொடர்ந்து தங்களது தொழிலில் ஈடுபட உதவவேண்டும்.

அதேபோல கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகரப் பேருந்து நிலையத்திற்கும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து நிலையத்திற்கும் இடையேயான ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அனைத்து பயணிகளும் எளிதாக கடக்க இலவச மினி பஸ் சேவையை அரசு போக்குவரத்து கழகம் நடத்தவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயணிப்பதற்கு இலவசபேட்டரி கார்களை அதிக அளவில் இயக்கவேண்டும்.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் மட்டும் இன்றி வருடத்தில் அத்தனை நாட்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். வரும்17ம் தேதி முதல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கும் இந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியம். இல்லையென்றால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்றாலே தென் மாவட்டங்களுக்கு போய், வர நினைக்கும் பயணிகள் அனைவருக்கும் அது ஒரு பெரும் சுமையாகவே இருக்கும்.

திமுக அரசுக்கு இன்னொரு மிகப்பெரிய சவாலும் இங்கே காத்திருக்கிறது. ஏனென்றால்
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் 4 அடி உயரம் வரை வெள்ள நீர் தேங்கி நின்றது. எனவே அதற்கான கட்டமைப்பையும் அரசு உருவாக்கவேண்டும்”என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதலில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். பிறகு போகப் போக அந்த கஷ்டம் பழகிவிடும் என்று கேலியாக கூறுவார்கள். அதுபோன்ற நிலை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்லும் பயணிகளுக்கு ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Views: - 493

1

0