பரிதவிக்கும் I.N.D.I.A. கூட்டணி?… வசமாக சிக்கிய திமுக எம்பி!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 9:41 pm
Jj - Updatenews360
Quick Share

திமுக எம்பிக்களிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், 5 மருத்துவக் கல்லூரிகள், சில பொறியியல் கல்லூரிகள், 2 மதுபான ஆலைகள், நட்சத்திர ஓட்டலுக்கு அதிபர் என்ற பெருமை ஜெகத்ரட்சகனுக்கு உண்டு. அவருடைய சொத்து மதிப்பை கேட்டாலே தலை சுற்றி விடும். 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.

ஆனாலும் கூட அவருக்கு அக்டோபர் 5 என்பது மிகவும் மன உளைச்சலை தந்த ஒரு நாளாகவே அமைந்துவிட்டது என்னவோ உண்மை.

அன்றைய தினம் மட்டும் தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் அவருக்கு தொடர்புடைய 75-க்கும் மேற்பட்ட இடங்களில் 700-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அதிரடி ரெய்டில் இறங்கினர்.

இதுவரை இந்தியாவில் எந்தவொரு எம்பி தொடர்புடைய இடங்களில் மட்டும் இவ்வளவு சோதனைகள் நடந்திருக்குமா என்பது கேள்விக் குறிதான். ஏற்கனவே 2011, 2016ம் ஆண்டுகளில் வருமான வரித்துறை ஜெகத்ரட்சகன் எம்பி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக புகார் எழுந்ததன் பேரில், அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் சொத்துக்களையும் முடக்கியது.

இந்த ரெய்டுகள் எல்லாவற்றையுமே மிஞ்சுவது போல அக்டோபர் 5-ம் தேதி ஐடி சோதனை அமைந்து விட்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால் கல்வி கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு மற்றும் நன்கொடை வாங்கி குவிப்பு, வரிஏய்ப்பு சந்தேகம் ஆகியவை தொடர்பாகத்தான் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டாலும் கூட ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலைகளில் ஏன் சோதனை நடந்தது என்ற இன்னொரு பெரிய கேள்வியும் எழுகிறது.

வருமானவரித் துறை மிகப்பெரிய அதிகாரிகள் பட்டாளத்தை களம் இறக்கிவிட்டு அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு அலசியதால் திமுக தலைமை மிகுந்த அப்செட்டுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலின் சலவை அறைக்குள் புகுந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த உடைகளையும் சோதனை போட்டதுதான் இதில் உச்சம்.

இதனால் திமுக தலைமை ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆகையால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி கொந்தளித்து அறிக்கை விட்டாரோ அதேபோல மீண்டும் தனது கண்டனத்தை மத்திய அரசுக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர், தனது சமூக வலைத் தள பக்கத்தில், “மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.

எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டும் என்று அமலாக்க துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக மறந்துவிட்டது. ஆனால் அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதில் நரகத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக தெளிவாக பயப்படுகிறது. அவர்கள் தங்கள் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என்று மிகவும் காட்டமாக தாக்கி இருக்கிறார்.

“ஜெகத்ரட்சகன் எம்பி மீதான வருமான வரித்துறை ரெய்டுக்கு முழுக்க முழுக்க அரசியல் பின்னணிதான் காரணம் என்று கூறுவது ஏற்புடையதாக தெரியவில்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த இரு வேறு நிகழ்வுகளை இதற்கு ஆதாரமாக கூற முடியும்.

ஏனென்றால் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் சென்னை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் மறுநாள் அவருடைய தந்தை செல்வசேகரும் தூக்கில் தொங்கினார். இதனால் கொதித்துப்போன ஜெகதீஸ்வரனின் நெருங்கிய நண்பரான பயாஸ்தீன் என்பவர், “நான் பாலாஜி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறேன். இது ஒரு டீம்ட் கல்லூரி. இங்கு சேர
25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. 

என் தந்தை பணம் கொடுக்க முடியும் என்பதால்தான் என்னை இந்த கல்லூரியில் சேர்த்தார். ஜெகதீஸ் என்னை விட நன்றாக படிக்கும் மாணவர். இந்த இருக்கைக்கு நான் தகுதியானவனே அல்ல. தனியார் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தப் படிப்புச் செலவு 1.5 கோடி ரூபாய் வரை ஆகும். இதனால் நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களால் முழுப் படிப்புச் செலவையும் ஈடுகட்ட முடியாது. அதனால் நீட் தேர்வு தேவையில்லை” என்று அந்த மாணவன் வீடியோவில் மனம் குமுறி இருந்தார்.

அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்த மாணவர் படித்து வரும் மருத்துவக் கல்லூரி ஜெகத்ரட்சகன் எம்பிக்கு சொந்தமானது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதன் மூலம் அந்த மாணவர் மட்டுமல்லாமல் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களில் ஏராளமானோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தால்தான் இடமே கிடைக்கும் என்ற பகீர் தகவலும் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருவள்ளூரில் நடந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக கைத்தறி துறை அமைச்சரான காந்தி அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகனை புகழ்ந்து பேசுவதாக கருதி அவர் முன்பாகவே ஒரு உண்மையை போட்டும் உடைத்தார். “ஜெகத்ரட்சகனுக்கு ஐந்து மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி எவ்வளவு சொத்துக்கள் எங்கே இருக்கிறது என்று அவருக்கே தெரியாது” எனக் கூறியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே ஜெகத்ரட்சகன் எம்பிக்கு சொந்தமான இடங்களில் இரண்டு முறை அதிரடி ரெய்டு நடத்தி இருந்த வருமானவரித் துறைக்கு மருத்துவ மாணவரும், திமுக அமைச்சரும் தெரிவித்த கருத்துக்கள் கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது.

அதனால்தான் இந்த முறை 70க்கும் மேலான இடங்களில் ஐடி அதிகாரிகள் ஒரே நாளில் ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனங்களை குறி வைத்து களம் இறங்கியது. இதில் மாணவன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கூறியதும் அமைச்சர் காந்தி அரசு விழாவில் ஜெகத்ரட்சகன் சொத்து பற்றி மனம் திறந்து பேசியதும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் ஆகிவிட்டது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை வருமானவரி துறையும், அமலாக்கத்துறையும் மே ஜூன் மாதங்களில் ரவுண்டு கட்டி ரெய்ட் நடத்தி படாத பாடு பட வைத்து விட்டனர். கடந்த நான்கு மாதங்களாக நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

அமைச்சராக இருக்கும் அவரை ஜாமீனில் வெளியே விட்டால் டிஜிட்டல் ஆதார சாட்சியங்களைக் கூட தனது பதவியின் அதிகாரத்தை வைத்து கலைத்து விடுவார் அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் அமலாக்கத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பிடிபடும் வரை அமலாக்கத்துறையும் இந்த வழக்கை லேசில் விட்டு விடாது என்று கூறுகிறார்கள். இதற்கிடையேதான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் மீண்டும் தூசிதட்டப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையும், வருமானவரித் துறையும் கடந்த சில மாதங்களாக அதிரடி காட்டி வருவதால் 2024 தேர்தலில் இண்டியா கூட்டணிக்கான முழுச் செலவையும் திமுக ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி விட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன் நடத்தும் மதுபான ஆலைகள் மூலமும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு அந்தப் பணம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தேர்தல் செலவுக்கு செல்வதை தடுக்கும் நோக்கத்துடனும் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதனால் எதிர்க்கட்சிகள் பதற்றத்தில் உள்ளன என்பதும் வெளிப்படை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரும், திமுக அமைச்சர் ஒருவரும் ஜெகத்ரட்சகன் எம்பி மீதான வருமானவரி துறையின் இந்த திடீர் சோதனைக்கு ஒரு முக்கிய காரணம் என்ற வாதமும் ஏற்புடையதாகவே உள்ளது.

Views: - 527

0

0