ஒரு மணி நேரத்தில் மாறிய அரசியல் களம்.. அண்ணாமலையுடன் ஜிகே வாசன் : இபிஎஸ் உடன் த.மா.கா.. ட்விஸ்ட் வைத்த யுவராஜ்!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 1:35 pm
Yuvaraj
Quick Share

ஒரு மணி நேரத்தில் மாறிய அரசியல் களம்.. அண்ணாமலையுடன் ஜிகே வாசன் : இபிஎஸ் உடன் த.மா.கா.. ட்விஸ்ட் வைத்த யுவராஜ்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணி என அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மறு பக்கம் அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி தாவி வருகின்றர்.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த த.மா.கா தலைவர் ஜிகே வாசன், பாஜக கூட்டணியில் இணைவதாகவும், ஒரு தொகுதி, ராஜ்யசபா பதவி கேட்டுள்ளதாக கூறினார்.

பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அவரது தமிழ் மாநில காங்கிரஸின் மாநில செயலாளர் யுவராஜ், சேலத்தில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பாஜகவுடன் ஜிகே வாசன் இணக்கமான நட்புறவில் இருந்த போதே பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தவர் யுவராஜ்.

தற்போது பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேருவதாக அறிவித்த உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யுவராஜ் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், எடபபடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக மட்டும் தாம் சந்தித்து பேசியதாக கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியுடனான பேச்சுவார்த்தை விவரங்களை யுவராஜ் வெளிப்படுத்தவில்லை.

இதனிடையே நேற்று ஜிகே வாசன் தலைமையில் த.மா.கா ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் தமாகாவின் பெரும்பாலான நிர்வாகிகள் முடிவுக்கு மதிப்பு தராமல், பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்துவிட்டார். இதில் தமாகா நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர்தான் யுவராஜ். அவரைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெல்வது என கணக்கு போட்டு காத்திருந்தாராம்.

ஆனால் ஜிகே வாசனின் இந்த திடீர் அறிவிப்பு அவரை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இதனாலேயே ஜிகே வாசன் அறிவித்த உடனேயே எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து பேசினார் யுவராஜ்.

தமாகாவில் இருந்து விலகி யுவராஜ் அதிமுகவில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வேட்பாளராகவும் யுவராஜ் அறிவிக்கப்படலாம். யுவராஜைத் தொடர்ந்து தமாகா நிர்வாகிகள் மேலும் பலர் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணையவும் கூடும் என்கின்றன. யுவராஜின் இந்த திடீர் சந்திப்புதான் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 88

0

0