30 ஆண்டு காலமாக நடந்த சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி… ஆனால்… : திருமாவளவன் திடீர் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2023, 4:23 pm
Thiruma - Updatenews360
Quick Share

30 ஆண்டு காலமாக நடந்த சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி… ஆனால்… : திருமாவளவன் திடீர் கோரிக்கை!!

வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அதன்படி, இவ்வழக்கில் 269 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.

இதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கட்டிருந்தது. மேலும், வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீடு மனுக்களை சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவி வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிடத்துக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.

அந்தவகையில், வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கின்றோம் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கின்றோம். இதற்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்கு துணையாக இருந்த சிபிஐ(எம்) கட்சியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்குப் புகட்டப்பட்ட பாடம் இந்தத் தீர்ப்பு. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, ஐகோர்ட் உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், வேலையும் வழங்குவதோடு, தீர்ப்பில் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர் ஆகியோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 291

0

0