தடுப்பை தாண்டி பைக்குகள் மீது மோதிய மினி சரக்கு லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 பேர் பலி : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
4 December 2021, 8:04 pm
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் – கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலூரில் உடுமலையிலிருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்ற மினி சரக்கு லாரியை உடுமலையைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (26) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பொங்கலூர் பேருந்து நிறுத்தத்தில் அதிவேகமாக சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனின் மீது ஏறி மினி லாரியின் முன்பக்க டயர் வெடித்த நிலையில், சாலையின் எதிர் திசையில் தாறுமாறாக சென்றுள்ளது.

அப்போது, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு அவிநாசி பாளையத்திலிருந்து காட்டூர் நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி நின்றது. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த பொங்கலூர் வளையப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராசாமணி (65) என்பவரும், பொங்கலூர் சின்னகாட்டூரை சேர்ந்த விவசாயி கனகராஜ் (45) என்பவரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரண்டு இரு சக்கர வாகனங்களும் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன. இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடம் விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் விபத்தில் பலியான இருவர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கு காரணமான உடுமலையை சேர்ந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் பிரகாஷ் குமார் என்பவரை போலிசார் கைது செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 775

0

0