இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்… பிரதமர் சொன்னதால்தான் நான் சம்மதித்தேன் : பிரஸ்மீட்டில் பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 9:24 pm
OPS Speech - Updatenews360
Quick Share

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

டிடிவி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம். தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அது அதிகாரமற்ற பதவி. இருந்தபோதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.

இப்போது ஒற்றைத் தலைமை பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. 6 ஆண்டு காலம் நன்றாக கட்சியை வழிநடத்திச் சென்ற நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்தது சரியல்ல. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்சனை தேவையில்லை. நானோ, எடப்பாடி பழனிசாமியோ இதுபற்றி பேசியது இல்லை.

ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்திருந்தோம். பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவுக்கு கொடுத்த பதவியில் யாரும் வரக்கூடாது. மீண்டும் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 492

0

0