சோனியாவுக்கு ஒரு நியாயம்..? உங்களுக்கு ஒரு நியாயமா..? ‘திருச்சி’ தொகுதிக்காக மல்லுக்கட்டும் ராம ஸ்ரீனிவாசன் Vs திருச்சி சூர்யா..!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 3:06 pm
Quick Share

திருச்சி தொகுதியில் பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசனை களமிறக்க போர்க் கொடி தூக்கிய திருச்சி சூர்யா சிவா, பாஜக தலைமையை சீண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்குப் போட்டியாக பாஜக தனி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே, ஜான்பாண்டியனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில், பாஜக தற்போது தான் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்களும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் த.ம.மு.க., தேவநாதனின் இ.ம.க.மு.க., ஏ.சி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இதன்மூலம் 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குப் போக, எஞ்சிய 20 இடங்களில் பாஜக நேரடியாக போட்டியிட இருக்கிறது. இதனிடையே, அண்மையில் பாஜக வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானது.

மதுரையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டதால், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் இராம. சீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோவை எதிர்த்து பேராசிரியர் இராம. சீனிவாசனை களத்தில் இறக்குவது பற்றி பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது.

ஆனால், கட்சியிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திருச்சியில் ராம சீனிவாசன் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதராவாளர் திருச்சி சூர்யா சிவா. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என்றும், வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தனது X தளப்பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவுக்கு, பாஜக மூத்த தலைவர் பேராசிரியர் இராம. சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்துள்ள பதிவில், ” அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ; அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் ; நான் மண்ணுக்கான மைந்தன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையேயான மோதலில் உணர்ச்சிவசப்பட்ட திருச்சி சூர்யா சிவா, பாஜகவையும் உள்ளே இழுத்து விட்டதைப் போல, சில கேள்விகளை எழுப்பியது, பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமசீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திருச்சி சூர்யா சிவா விடுத்த X தளப்பதிவில், “மண்ணுக்கான மைந்தராக இருந்தால் போதும் என்றால் சோனியா காந்தி பிரதமர் ஆகக் கூடாது என்று தடுத்தது ஏன்..? என்றும், CAA சட்டத்தை நிறைவேற்றிய கட்சியில் இருந்து கொண்டு சம்பந்தம் இல்லாத மண்ணுக்கு நான் மைந்தன் என்று உரிமை கொண்டாடலாமா..? என்றும், மண்ணின் மைந்தனின் குரலை புறக்கணிக்கலாமா..?, என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் திமுக மற்றும் காங்கிரஸில் வேட்பாளர்களுக்க எதிர்ப்பு தெரிவித்து உட்கட்சி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னும் வேட்பாளரை அறிவிக்காத பாஜகவில் நிர்வாகிகளுக்குள்ளே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Views: - 128

0

0