த.வெ.க தோழர்களே… 2 கோடி உறுப்பினர்கள் முதல் இலக்கு : ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்யின் அரசியல் கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 4:38 pm
Vijay
Quick Share

த.வெ.க தோழர்களே… 2 கோடி உறுப்பினர்கள் முதல் இலக்கு : ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்யின் அரசியல் கட்சி!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை சென்னை சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

மேலும் அந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்து, நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைமை நிலைய செயலக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யால் மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்.

இந்த அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு வீச்சில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட வேண்டும். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.

அதன்படி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் த.வெ.கவில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொண்டு, விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்?, எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கட்சியில் விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் போஸ்டர்கள், பேனர்கள் பயன்படுத்தும் போதும், கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு நமது இலக்கான இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று அக்கட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 219

0

0