தமிழகத்தில் எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும்.. ‘இந்தி தெரியாது போடா’ ; இதுதான் ஆரம்பம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 3:56 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியும், பல்வேறு படிப்புகளுக்கு இந்தியளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்தும், திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கழகத்தின் எதிர்கால தலைவரே என உதயநிதியை புகழந்து தயாநிதி மாறன் உரையை தொடங்கினர். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் தமிழ் உணர்வை வெளி கொண்டு வர உதவி இருக்கிறீர்கள், நீங்கள் என்று கூறிய அவர், மோடிக்கு என்ன தாய் மொழி இந்தி-யா? அவர் குஜராத்தி தானே என்று விமர்சனம் செய்தார்.

2024 தேர்தலை மையப்படுத்தி மத்திய அரசு இந்தியை திணித்து வருவதாகவும், ஐஐடியில் இந்தியை கொண்டு வந்து பாருங்கள், அவா உங்களை இந்தியை கொண்டு வர விட மாட்டார்கள் என்றும் பேசிய அவர், மத்திய அரசின் பருப்பு தமிழகத்தில் வேகாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- தமிழகத்தின் மொழி , கல்வி உரிமையை பறிக்கும் பாசிச அரசாக பாஜக இருக்கிறது.
ஒன்றியம் என்று சொன்னால் பிரதமருக்கு கோபம் வருகிறது. எனவே ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம்.

மோடி அவர்களே இங்கு அதிமுக ஆட்சி நடக்கவில்லை. தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வமோ, பழனிசாமியோ அல்ல. தமிழகத்தை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது பாஜக கையில்தான் இருக்கிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒருபோதும் திமுகவினர் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

தமிழகத்தில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா..’. 3 மொழிப்போரை திமுக சந்தித்தது. கடைசியாக நடந்த மொழிப்போரில் மாணவர் அணியினர் தீவிரமாக பங்கேற்றனர். மாணவர் அணி, இளைஞர் அணியினர் தீவிரமாக மீண்டும் போராடி இந்தி எதிர்ப்பு போரில் வெற்றி பெறுவோம்.

இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் சென்னையில் மட்டுமல்ல, டெல்லிக்கும் வந்து , பிரதமர் அலுவலகம் முன்பு போராடுவோம். அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மேற்கு வங்கத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்மையில் பங்கேற்றுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலை போல 2024ம் ஆண்டு வரும் தேர்தலிலும் பாஜகவை தமிழகத்தில் ஓட ஓட விரட்டி அடிப்போம். 2024 தேர்தல் பிராசரத்திற்கு சிறந்த தொடக்கமாக இந்த போராட்டம் அமைந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

Views: - 392

0

0