ஆக.22ம் தேதிக்காக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு..? தொண்டர்கள் ‘ஷாக்’…!
5 August 2020, 10:39 amசென்னை: முதல்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கறுப்பர் கூட்டத்தால் வந்த தலைவலி, திமுகவை இப்போது விடாது துரத்தி வருகிறது. அதனால் அதன் தலைமை மட்டுமில்லாது அதன் அடுத்தக்கட்ட தலைவர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதன் எதிரொலியாக தான் அக்கட்சியின் ஆர்எஸ் பாரதி, திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறி இருந்தார். கறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி விவகாரத்தில் கைதானவர்களுக்கு குண்டர் சட்டம் பாய, அது திமுகவுக்கு மேலும் அதிர்ச்சி தந்தது.
அதில் கைதாகி உள்ள செந்தில்வாசனுக்கு திமுகவின் ஐடி விங்கில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் காவல்துறை விசாரணையில் வெளிப்பட ஸ்டாலின் தரப்புக்கு பெரும் சிக்கலாகி இருக்கிறது.
கறுப்பர் கூட்டம் பின்னணியில் திமுக என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக செய்திகள் காவல்துறைய வசம் இருந்தே லீக் செய்யப்பட, அது அப்படியே ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்துக்களின் ஒட்டுமொத்த கோபம் இப்போது திமுகவின் மீது உள்ளதை புரிந்து கொண்ட ஸ்டாலின் தமது ஆஸ்தான தளகர்த்தாக்களுடன் கலந்து பேசி உள்ளாராம். இந்த பிரச்னைகளில் இருந்தும், திமுகவின் மீது விழுந்த இந்த முத்திரையையும் எப்படி அகற்றலாம் என்றும் பேசியுள்ளனராம்.
கடைசியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். அதாவது இந்துக்களுக்கு பாசமான கட்சி, நேசமான கட்சி என்பதை அவர்களது மனதில் படும்படி செய்ய வேண்டும். ஆகையால் இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை பட்டியலிட்டு அதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவிப்பது, அதை சமூக வலைதளங்களில் அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்வது என்பது தான் அந்த திட்டம்.
அதன்படி தான் அண்மையில் திமுக விவசாய பிரிவு அணியின் சார்பில் ஆடிபெருக்கு நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டனவாம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, இந்த விவரம் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மற்ற அணிகளின் நிர்வாகிகளும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மற்றவர்களை செய்ய சொல்லிவிட்டு தாம் செய்யாமல் போனால் கேள்வி வருமே என்று எண்ணிய ஸ்டாலின் முதன்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.
அதற்கான போஸ்டர் அடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். தாமும் அதில் இணைய வேண்டி, முதல்முறையாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை அறிக்கை வாயிலாக தெரிவிக்க ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையெல்லாம் உற்று நோக்கும் அடிமட்ட உடன்பிறப்புகள், தொலைக்காட்சிகளில் விடுமுறை தின கொண்டாட்டங்கள் என்று இந்து மக்கள் பண்டிகைகளின் போது விளம்பரம செய்யும் அவர்கள், இப்போது நேரடியாக வாழ்த்து களத்தில் இறங்கி இருக்கின்றனர்… எல்லாம் பதவி படுத்தும்பாடு என்று புலம்ப ஆரம்பித்து உள்ளனர்.