மாப்பிள்ளை நான்தான்… ஆனா போட்டிருக்கிற சட்டை… சிக்கலில் விசிக எம்பி ரவிக்குமார்

Author: Udhayakumar Raman
10 September 2021, 10:47 pm
Quick Share

அரசியலில் கேலிக்கூத்தான விஷயங்கள் நிறையவே நடப்பதுண்டு. அதை பொதுஜன மக்களும் ரசித்து விட்டு அப்படியே மறந்து போய்விடுவார்கள். சில நேரங்களில் பிரச்சனை சட்டரீதியாக உருவெடுக்கும்போது அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக மாறி வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவும் வைத்துவிடும். அதுவும் கோர்ட்டுபடி ஏற நேர்ந்தால் அரசியல்வாதிகள் அந்தர் பல்டி அடிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட சில காட்சிகள் தமிழக மக்களின் நகைச்சுவை உணர்வுக்கு நல்ல தீனியாகவும் அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கியது? என்ற கேள்வியை அரசியல் ஆர்வலர்களிடம் கேட்டால் விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் என 2, மதிமுகவுக்கு ஈரோடு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

அந்த 5 தொகுதிகளிலும் இந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்றும் அடித்துக் கூறுவார்கள். அதாவது சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் அதன் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், ஈரோட்டில் மதிமுகவின் சார்பில் கணேசமூர்த்தியும், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரும், நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜும் வெற்றி பெற்றதை நினைவு கூர்வார்கள். 2019 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை திமுக தலைமையுடன் தீவிரமாக பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டதையும் அவர்கள் மறக்காமல் சொல்வார்கள். இதில் திருமாவளவன் மட்டும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற நால்வரும் திமுகவின் சின்னமான உதயசூரியனில் நின்று ஒவ்வொருவரும் ஒரு லட்சம், 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றனர்.

ஆனால் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பதுபோல் இந்த 4 எம்பிக்களும் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்ற கேள்வியுடன் ஒரு வழக்கு கோர்ட்டில் அரங்கேறி இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டி.ரவிக்குமார், நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பி.சின்ராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் ஏ.கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் டி.ஆர்.பாரிவேந்தர் ஆகியோர் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி.க்களாகி உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம். ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக் கொண்டு மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட சட்டத்தில் இடமில்லை. எனவே, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த 4 எம்பி.க்களின் வெற்றி செல்லாது எனஅறிவிக்க வேண்டும். இதேபோல கூட்டணி கட்சியினர் அதிமுக கட்சி சின்னத்தில் போட்டியிட்டதும் செல்லாது. இந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த 4 எம்பி.க்கள், தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எம்பி.க்கள், தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கணேசமூர்த்தி எம்பி., தான் திமுக உறுப்பினர் என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது விழுப்புரம் எம்பி., ரவிக்குமாரும் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். அதில், ‘நான் திமுக உறுப்பினர். மனுதாரர், நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவன் என்ற அனுமானத்தின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் பாரம்-பி பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக திமுக உறுப்பினர் பட்டியலில் எனது பெயர் உள்ளது. அதற்கான அடையாள அட்டையும் உள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும். மனுதாரர் விளம்பரநோக்கில் பொதுநல வழக்காக தொடர்ந்துள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும்’ என கூறியுள்ளார். இதைக்கேட்டால், சிலருக்கு சிரிப்பு வரலாம். இன்னும் சிலருக்கு வேடிக்கையாகவும் தெரியலாம். இதுகுறித்து நெட்டிசன்கள், ரவிக்குமார் எம்பியை ஏகத்துக்கும் கலாய்த்து இருக்கின்றனர். “நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவன் அல்ல. திமுகவை சேர்ந்தவன் என்று நீதிமன்றத்தில் விசிக ரவிக்குமார் எழுத்துப்பூர்வமாக தந்திருக்கார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம பொய் சொல்றார், பாருங்க!பதவி வெறி கொண்ட இந்த கும்பல் எதையும் செய்யத் தயங்காது.

நம்ப முடியாத அளவுக்கு பொய் சொன்னால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று கூறுவதுண்டு. ரவிக்குமார் தனது எம்பி பதவியை காப்பாற்றிக் கொள்ள சோற்றுக்குள் யானையை மறைக்க பார்க்கிறார்.சட்டம் படித்தவரே சட்டத்தின் சந்து பொந்துகளில் ஓடி ஒளிகிறார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இதைத்தான் உங்களுக்கு சொல்லி கொடுத்தாரா? மாப்பிள்ளை நான்தான்… ஆனா போட்டிருக்கிற சட்டை மட்டும் அவரோடது என்று சாமர்த்தியமாக நழுவிக் கொள்கிறார்கள். அவர்கள் கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து கொள்ளலாம்….
இவர்களெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே திமுகவின் உறுப்பினர் அட்டையை வாங்கி வைத்திருப்பார்கள்.இடைத்தரகு வேலை பார்ப்பவர்கள் எந்த கட்சியில் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்!” என்று வித விதமாய், ரக ராகமாய் ஏளனம் செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது,”நாடாளுமன்ற தேர்தலின்போது இவர்கள் உண்மையிலேயே திமுகவில்தான் இருந்தார்களா? என்பதை மனசாட்சியோடு பேச வேண்டும். திறமை இருந்தால் சட்டத்தை எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றிவிட முடியும். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது அது பற்றிய செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியானது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரத்தில் திமுகவின் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதே நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுகவுக்கு நாமக்கல் பெரம்பலூர், ஈரோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுபற்றிய செய்திகள் முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகவும் வெளியானது.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டபோதும் தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், இவர்கள் திமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களைப் பற்றிய சுய விவரக் குறிப்பில் அவர்கள் சார்ந்திருந்த உண்மையான கட்சியைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தவிர, தேர்தலின்போது எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களிலும், ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும் அவர்கள் சார்ந்திருந்த உண்மையான கட்சி பற்றிய அடையாளத்தை வெளிப்படுத்திய வாசகங்கள்தான் காணப்பட்டது. உள்ளூர் மக்களுக்கும் இது நன்றாகவே தெரியும். இப்போது கோர்ட்டில் நாங்கள் திமுக உறுப்பினர்கள் என்று கூறுபவர்கள் அப்போது இந்த செய்திகளை மறுக்கவில்லை. அது குறித்து ஒரு சிறிய மறுப்பு செய்தி கூட வெளியிடவில்லை. ஆனால் இப்போது பதவிக்கு ஆபத்து என்றதுமே பதறுகிறார்கள். அந்த நேரத்தில் சுவர், போஸ்டர் விளம்பரங்களை எங்களுக்கே தெரியாமல் யாரோ விஷமிகள் தவறாக எழுதி விட்டார்கள். ஒட்டி விட்டார்கள். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? என்றும் கூட இவர்கள் இனி கூறலாம்.

ரவிக்குமார், நான் முன்பு திமுகவில் உறுப்பினராக இருந்தேன். அதனால்தான் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்கள் என்று கோர்ட்டில் கூறியிருப்பதை விசிக தலைவர் திருமாவளவன் ஏற்றுக் கொள்கிறாரா? என்பதை அண்ணல் அம்பேத்கர் ஆணையாக, மனசாட்சியோடு தெளிவுபடுத்தவேண்டும்.சட்டம் பற்றி வாய் கிழிய பேசும்
சில முன்னணி ஊடகங்களும் கூட இவர்களுக்குமுட்டுக் கொடுப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு எழுத்தாளர் டி.ரவிக்குமார், தன்னை விசிக பொதுச்செயலாளர் என்று எங்குமே குறிப்பிடுவதில்லை. விசிகவினரும் அவரை விழுப்புரம் எம்பி. என்றே அழைக்கின்றனர் என்று அந்த ஊடகங்கள் வக்காலத்து வாங்குகின்றன” என்று குறிப்பிட்டனர். அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது!

Views: - 203

0

0