போனமுறை நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு என்ன ஆச்சு? வெள்ளை அறிக்கை அளிக்க தயாரா? எஸ்டிபிஐ மாநாட்டில் அதிர வைத்த இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 8:59 am
SDPI EPS
Quick Share

போனமுறை நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு என்ன ஆச்சு? வெள்ளை அறிக்கை அளிக்க தயாரா? எஸ்டிபிஐ மாநாட்டில் அதிர வைத்த இபிஎஸ்!

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட SDPI தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்ட மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலத் தலைவர் அஷ்ரப் பாகவி, கர்நாடக மாநிலத் தலைவர் அப்துல் மஜீத், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவ்லவி ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் பேராயர் யுவான் அம்புரோஸ் மற்றும் தவத்திரு திருவடிக் குடில் அடிகளார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்ட SDPI நிர்வாகிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொண்டர்களுக்கு முன்னிலையில், இந்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

  1. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை – சட்ட ரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
  2. நீட் தேர்வுக்கு விலக்கு – தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.
  3. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையைப் போக்க வேண்டும்.
  4. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
  5. சிறுபான்மை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.
  6. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  7. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
  8. சிஏஏ சட்டத்தை அமுல்படுத்துவது அரசியல் அமைப்பிற்கு எதிரானது.
  9. தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சாதிய தாக்குதல்களை தடுத்திட வேண்டும்.
  10. படித்த இளைஞர்களை ஏமாற்றாமல், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையோடு நிரப்ப வேண்டும்.
  11. ஆக்கிரமிப்பு வஃபு சொத்துக்களை மீட்டு, அதன் மூலம் சிறுபான்மை சமூகம் பயன் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  12. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதி செய்வதோடு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரைவில் செயல்படுத்த வேண்டும்

உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநாட்டில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வோட்டு வங்கியை குறிவைத்து, அதிமுக SDPI கட்சியுடன் சேர்ந்து பயணிக்கத் துவங்கி உள்ளதாகவே இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை உணர்த்துகிறது.

எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :

வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற அருமையான தலைப்பில் பிரம்மாண்டமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய சகோதரிகள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பது அதன் சிறப்பை உணர்த்துகிறது.

அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். மதுரை ஒரு ராசியான மண். இங்கு மாநாடு நடப்பதால் தொட்டது துலங்கும்.

திமுக 15 ஆண்டு காலமாக மத்திய அரசாங்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சிறுபான்மை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அப்போதெல்லாம் சிறுபான்மை மக்கள், திமுகவின் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் வந்து விட்டால் போதும், திமுகவினர் அழகாகப் பேசுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்பார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த உடன், நாட்டு மக்களைப் பார்க்க மாட்டார்கள். வீட்டு மக்களைத்தான் பார்ப்பார்கள்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் போது, சிறையில் 25 ஆண்டு காலமாக வாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைக்கு முழு முயற்சி எடுப்போம். எதைச் சொன்னாலும் அதைச் சாதித்துக் காட்டக் கூடிய கட்சி அ.இ. அதிமுக.

நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு யார் பிரதமர் வேட்பாளர்? எனக் கேட்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், யார் பிரதமர் வேட்பாளர் என சுட்டிக்காட்டி, ஒரிஸாவில் நவீன் பட்நாயக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும், கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் எம்.பி. சீட்களை வென்றடுத்தார்கள். இல்லையே?

ஆக, மக்களுக்கு வேண்டியது நன்மை. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டாலும், அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக குரல் கொடுக்கும். எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் நாங்கள் சொல்வோம். சொன்னதைச் செய்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ கொடுக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய கட்சி அஇஅதிமுக.

விடியா திமுக அரசு, ஆட்சி ஏற்று இரண்டரை ஆண்டு காலத்தில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை, இளைஞர்கள் சீரழிவு இது தான் இந்த ஆட்சியின் சாதனை. 40 சதவீதம் விலைவாசி உயர்வு, 52 சதவீத மின் கட்டண உயர்வு, 100 சதவீத வீட்டு வரி உயர்வு, 150 சதவீத கடை வரி உயர்வு.

நீங்கள் சிறுபான்மை மக்கள் தொழில் செய்து பிழைப்பவர்கள். இந்த வரி உயர்வால் திமுக ஆட்சியில் உங்களுக்குத் துன்பமும் வேதனையும்தான் மிச்சம்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, பிஜேபியுடன் அதிமுக கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்துகிறேன்.

அதிமுகவும் SDPI யும் இணைந்து மக்கள் பணி செய்வதற்கு இந்தக் கூட்டத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மை.

SDPI கட்சி மட்டுமல்ல. இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. அதிமுக தலைமையில் சிறப்பானக் கூட்டணி அமைத்து, உங்கள் ஆதரவோடு நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் நாம் வெல்வோம். நாடாளுமன்றத்தில் நமது கூட்டணி எம்பிக்கள் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்புவார்கள். தமிழகத்தில் நல்ல பல திட்டங்கள் கொண்டு வர, கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக மீண்டும் தமிழகம் திகழ, சிறுபான்மை மக்கள் ஆதரவு தர வேண்டும். சிறுபான்மை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

கண்ணை இமைப் பாதுகாப்பது போல, அஇஅதிமுக சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் என எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

Views: - 265

0

0