தனிநபர் மீது ஏன் இவ்ளோ வன்மம்? கர்மா ஒரு பூமராங் : சீண்டும் காயத்ரி ரகுராம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 8:48 pm
Gayathri - Updatenews360
Quick Share

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதும் அவர் படித்த மேதை அதனால் சரியான நபரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டது என பலர் பாராட்டி வந்தனர். அது போல் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசை குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்வி கேட்ட போதெல்லாம் சபாஷ் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதில் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். என்னை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரிடம் இருந்து பிரிப்பதற்காக ஒரு கும்பல் முயற்சித்து வருகிறது என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.

அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என அதற்கான பட்டியல் முரசொலி நாளிதலில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியிஸல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமிஸ ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாளை மாலை சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென ஓரங்கட்டப்படுகிறார் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இது குறித்து பாஜவில் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், பி.டி.ஆர், ஒரே அரசியல் கொள்கை பின்னணியில் இருந்து வரும் குடும்பம். தேர்தலை நியாயமாக எதிர்கொண்டு கடினமான பாதையில் வந்த ஒருவர்.

மற்றொரு நபரின் மலிவான அரசியலின் காரணமாக, போலி ஆடியோ மற்றும் வீடியோவைக் கசிவு மூலம் தோல்வி எதிர்கொள்கிறார் புறக்கணிக்கப்படுகிறார், பிறரை மிதித்து மற்றவைகளை அழித்து வளரும் ஒருவரின் மோசமான மனம் ஒரு கெட்ட அரசியல்வாதி, கெட்ட மனிதர். இந்த மேனேஜர் ஆட்சிக்கு வந்தால் இந்த அணுகுமுறை தமிழகத்திற்கு பொதுமக்களுக்கு இதே மாதிரியாக அழிவு நோக்கி இருக்கும்.

இந்த மேனேஜர் ஒரு கட்சியை அழிக்கவில்லை, திராவிட மாடலை அழிக்கவில்லை, எதிர்க்கட்சி கொள்கையை அழிக்கவில்லை, ஆனால் அவர் ஒரு தனி நபரை மட்டுமே அழிக்கிறார், அப்போது கே.டி.ஆர் இப்போது பி.டி.ஆர். இது அரசியல் இல்லை இது குற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குற்றங்களுக்கு மக்களும் அரசாங்கமும் உடன்படக்கூடாது. கர்மா ஒரு பூமராங் அது மீண்டும் தாக்கும் என பதிவிட்டுள்ளார்.

Views: - 470

0

1