வடமாநில ஓட்டு வேட்டையில் குதிக்கும் CM ஸ்டாலின்?… இண்டி கூட்டணிக்கு கை கொடுக்குமா?…

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 9:26 pm
IND
Quick Share

வடமாநில ஓட்டு வேட்டையில் குதிக்கும் CM ஸ்டாலின்?… இண்டி கூட்டணிக்கு கை கொடுக்குமா?…

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தேசிய அரசியலில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். 26 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இண்டியா கூட்டணி அமைத்ததிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

இதற்கு முக்கிய காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற நேர்ந்தால் துணைப் பிரதமர் பதவி மற்றும் முக்கிய இலாக்காகளை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம்தான் என கூறப்பட்டாலும் கூட மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக திமுக அமைச்சர்களை குறி வைத்து ED, IT ரெய்டுகளை நடத்தி குடைச்சல் கொடுத்து வருவதுதான் என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று.

இதனால் முந்தைய தேர்தல்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுகவின் தொழில்நுட்ப பிரிவு அணி வடமாநிலங்களிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக
“இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்”, “மாநில உரிமைகளை மீட்போம் இந்தியாவை காப்போம்” என்னும் விளம்பரங்களை ஆங்கிலம் மற்றும் பல்வேறு மாநில மொழிகளில் வெளியிட்டும் அசத்தியது. இதற்காக மட்டுமே திமுக தலைமை 14 கோடி ரூபாயை செலவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: பாலியல் வழக்கில் பரபரப்பு TWIST.. பிரிஜ் பூஷனுக்கு எதிராக கொந்தளித்த COURT..!!

நாட்டிற்கு சிறந்த முன் உதாரணமாக, திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது
என்று அறிவாலயம் அவ்வப்போது பெருமிதத்துடன் கூறுவது வழக்கம். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது ஆட்சியின் சாதனைகள் குறித்து பொதுமேடைகளில் பேசும்போது இதைக் குறிப்பிடத் தவறுவதில்லை.

டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம், பஞ்சாப் மாநிலங்களில் திமுகவின் இந்த விளம்பரம் பல கோடி பேரை எட்டிவிட்டதாகவும் குறிப்பாக இளைஞர்களை வெகுவாக ஈர்த்து விட்டதாகவும் இண்டியா கூட்டணி தலைவர்கள் மூலம் திமுகவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் எங்கள் மாநிலங்களுக்கு நீங்கள் நேரில் வந்து முக்கிய நகரங்களில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் மூலம் மோடி மீண்டும் பிரதமராவதை தடுக்க முடியும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டும் உள்ளனர்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த மன மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மே 13ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மராட்டியம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஸ்டாலின் இண்டியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் ஆறாம் கட்டமாக மே 25ம் தேதி டெல்லியில் நடக்கும் 7 தொகுதிகளுக்கான தேர்தலிலும், ஏழாம் கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் 13 தொகுதிகளுக்கான தேர்தலிலும் அவர் தீவிர பிரச்சாரம் செய்ய விரும்புவதாக தெரிகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஸ்டாலின் கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பல தரப்பினரிடமும் பேசி வருகிறார்.

மேலும் தேர்தல் தொடர்பாக பல்வேறு ரிப்போர்ட்களையும் பெற்றுள்ள அவர் எங்கெல்லாம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும், எங்கெல்லாம் இழுபறி சூழல் இருக்கும் என்பதையும் கேட்டறிந்துள்ளார். இந்த ரிப்போர்ட்களை பொறுத்தவரை, திமுக கூட்டணி 40க்கு 40 கிடைக்கும் என்று சொல்லப்படுவதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திமுக நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசி வரும் நிலையில், ஸ்டாலின் வட மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கும் தகவலை அவர்களிடம் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார், என்கிறார்கள்.

இந்நிலையில்தான் அடுத்தகட்டமாக, இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பிரச்சார பயணத்திற்கான தேதிகள், இடங்கள் என நிகழ்ச்சி நிரல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டாலின் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதை இந்தியில் மொழிபெயர்த்து கூறுவதற்காக சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளாராம்.

இதை உறுதிப்படுத்துவது போல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் கருத்து தெரிவித்திருக்கிறார். இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி, பஞ்சாப்,மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “அதற்கு வாய்ப்பு இருக்கிறது, இல்லை என்று சொல்ல முடியாது” என்றார்.

“தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து விட்டதாலும், ஏழு கட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் நாளான ஜூன் நான்காம் தேதி வரை மாநிலத்தில் பெரிய அரசியல் நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பதாலும் இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தை வட மாநிலங்களில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்காக
பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கலாம்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“குறிப்பாக டெல்லி மாநில முதலமைச்சரும் அவருடைய நெருங்கிய நண்பருமான
அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவர் மீது பரிவு கொண்டுள்ள ஸ்டாலின் டெல்லியிலும், பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்வார் என்று உறுதியாக கூற முடியும்.

அதேபோல சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்தான். பீகாரில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியும் எப்போதும் ஸ்டாலினுடன் தொடர்பில் இருப்பவர். இதனால் இவர்களுக்காக அந்த மாநிலங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்பு இண்டியா கூட்டணியில் இருந்தபோது டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஒருவர் நான் இந்தியில்தான் பேசுவேன். என்னை ஆங்கிலத்தில் பேச யாரும் கட்டாயப் படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், டி ஆர் பாலு எம்பிக்கும் கோபமாக பதிலளித்தார். இதற்கு திமுக பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் நிதிஷ்குமாரின் கோட்டைக்குள்ளேயே புகுந்து ஸ்டாலின் கலக்குவதற்கு திட்டமிட்டு இருக்கலாம்.

அதேநேரம் முதல் கட்ட தேர்தல் முடிந்து இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்த கேரளா, கர்நாடக மாநிலங்களில் பிரச்சாரம் செய்வது குறித்து திமுக தலைவர் பரிசீலித்ததாகவே தெரியவில்லை. ஒருவேளை இந்த இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தால் முதலில் காவிரியில் தண்ணீரை திறந்து விடுங்கள், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள் என்ற கோரிக்கையை கர்நாடக அரசிடம் நீங்கள் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வி தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் கிடுக்குப் பிடி போடப்படலாம். இதேபோல் கேரளாவில் பிரச்சாரம் செய்ய போயிருந்தால் முல்லைப் பெரியாறில் 142 அடி அளவிற்கு தண்ணீரை தேக்கி வைத்து அதன் பிறகு திறந்து விடுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் வைத்திருக்கலாமே என்ற கேள்விகள் தமிழக விவசாயிகளால் எழுப்பப்பட்டிருக்கும்.

அதனால் கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக தலைவர் ஸ்டாலின் தவிர்த்து இருக்கலாம். ஒருவேளை கேரளாவுக்கு சென்றிருந்தால் இன்னும் சிக்கல் அதிகமாகும் என்று கருதியும் இருக்கலாம். ஏனென்றால் இங்கே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், மார்க்சிஸ்ட்டும் கேரளாவில் எதிரெதிர் அணியில் இருக்கின்றன. அதனால் யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும் நிலைமை மோசமாகிவிடும் என்பதால் இந்த மாநிலங்களை கை விட்டு இருப்பார்.

அதே சமயம் வட மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தனது மகனும், அமைச்சருமான உதயநிதியை உடன் அழைத்து செல்வதற்கான வாய்ப்புகளும் ஸ்டாலினுக்கு உண்டு.

ஆனால் அவரை அழைத்துச் சென்றால் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தர்ம சங்கடமான நிலையே ஏற்படும். இதனால் டி ஆர் பாலு எம்பியை அந்த மாநிலங்களுக்கு ஸ்டாலின் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பே அதிகம் தென்படுகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 29ம் தேதி புறப்படும் அவர் மே 7ம் தேதி வரை அங்கு தங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதனால் அவர் மாலத்தீவில் இருந்து திரும்பிய பிறகு வட மாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி, பீகார், பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட போவது உறுதி என்றே தெரிகிறது. அது இண்டியா கூட்டணிக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 118

0

0