கோவையில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்…

Author: kavin kumar
10 February 2022, 10:50 pm
Quick Share

கோவை கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி துடியலூர் பகுதி பாஜக கட்சி சார்பாக 2வது வார்டில் வத்சலா போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அப்பகுதியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் நடந்து பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

முன்னதாக பிரச்சார வாகனத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2019ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ஆகியோர் இதுவரை உங்களை வந்து சந்தித்து இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் ஏற்கனவே 2011 முதல் 2016 வரை கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்து உங்களுக்கெல்லாம் தேவையான பணிகளை செய்து கொடுத்த வத்சலா இந்த முறை 2வது வார்டில் போட்டியிடுகிறார் என தெரிவித்தார். அதேபோல் 1வது வார்டில் பாண்டி சித்ரா போட்டியிடுகிறார்.

ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் இவர்கள் இருவருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்கள் அனைத்தையும் பொது மக்களிடத்தில் கொண்டு செல்லவும், கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் அனைத்தும் நான் அமைச்சராக இருந்த பொழுது பரிந்துரை செய்து கொடுத்ததுதான் பணிகள் நடைபெற்று வருகிறது என கூறினார்.

அதே போல் தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் கோவை முதல் பொள்ளாச்சி வரை கான்கிரீட் சாலை அமைத்துத் தந்ததும், நரேந்திர மோடி ஆட்சியில் தான் எனவும் ஈச்சனாரி கோவில் ஒரு அடி கூட இடிக்கப்படாமல் மேம்பாலம் கட்டித்தரப்படும் என்று கூறி தற்போது கட்டிதரப்பட்டுள்ளது எனவும், மேலும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள் யாரும் காசு பெற்று மக்களுக்கு தொண்டு செய்யமாட்டார்கள் என்றும் வத்சலா பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் வேலை செய்தார் என்று யாராவது கூறினார் அவர் இப்போதே வாபஸ் வாங்கிக்கொள்வார் என தெரிவித்தார். எனவே மக்களுக்கு சேவை செய்ய வத்சலா மற்றும் பாண்டி சித்ராவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார்.

Views: - 771

0

0