கோவையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயம் : முதலிடம் பிடித்த சென்னை வீரர்…

Author: kavin kumar
27 February 2022, 10:58 pm

கோவை : கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 இன் 4-வது சுற்றின் இறுதி போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை ,திருச்சூர், பெங்களூர், புனே, ஒரிசா ,குஜராத் உள்ளிட்ட பல போன்ற பகுதிகளில் இருந்து முன்னனி கார் பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற எல்.ஜி.பி ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் சீரிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தன் முன் செல்லும் வீரரரின் காரினை முந்தும் முனைப்பில் வேகத்தை கூட்டிச்சீறிப்பாய்ந்தனர். முதல் சுற்று முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து சாம்பியனாக பட்டத்தை வென்றதுடன் கோப்பையையும் கைபற்றினார்.

இது விஷ்ணு பிரசாத்தின் 14வது தேசிய பட்டமாகும். இரண்டாம் இடத்தை திருச்சூரை சேர்ந்த தில்ஜித் , மூன்றாவது இடத்தை கோவையை சேர்ந்த பாலாபிரசாத் பிடித்தனர். கடந்த இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியன்னாக 70 புள்ளிகள் பெற்ற விஷ்ணுபிரசாத் முதலுடத்தையும், 59 புள்ளிகள் பெற்ற தில்ஜித் இரண்டாம் இடத்தையும் ,55 புள்ளிகள் பெற்ற ஆரியா சிங் மற்றும் சந்தீப் குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.

இதேபோல் ராயல் என்பீல்டு இருசக்கர வாகன போட்டியில் அல்வின் சேவியர் முதலுடத்தையும், மெகா விதுராஜ் இரண்டாம் இடத்தையும், அனிஷ் செட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கொரானா பாதுகாப்பு முறைகள் பின்பற்றபட்டு நடத்தபட்ட இந்த தேசிய அளவிலான நான்கு மற்றும் இருசக்கர வாகன போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது இருப்பீனும் போட்டியை சாலைகளில் நின்றபடியே ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!