‘அவங்களும் எங்க குடும்பம்தான்’.. மணமக்களுடன் போஸ் கொடுத்த செல்லப் பிராணிகள்… நெகிழ வைத்த திருமண விழா!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
27 January 2023, 5:38 pm
Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நேரு மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். கட்டட வேலை செய்து வரும் அருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் மாடுபிடி வீரர்கள் ஆவர். அருண் தனது நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளை, கிடாய் சண்டையில் பங்கேற்கும் ஆட்டு கிடாய், சிப்பிப்பாறை நாய், ஜாதி சேவல் உள்ளிட்ட நாட்டு இன விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அருணுக்கும், கல்லுமடம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் இன்று வெள்ளக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்த அருண், தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை. ஆட்டுக்கிடாய் மற்றும் வேட்டை நாய்களையும் பங்கேற்க செய்ய விரும்பினார்.

இதை அறிந்த அவரது நண்பர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், இரண்டு வேட்டை நாய்கள், ஜாதி சேவல் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் நாட்டு விலங்குகளை திருமண மண்டபத்திற்கு நேரில் அழைத்து வந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இதைக்கண்டு ஆச்சரியமடைந்தனர்.

மேலும், அருண் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மணமக்களாக ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக் கிடாய், வேட்டை நாய்கள் மற்றும் சேவலுடனும், தனது நண்பர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வீட்டில் வளர்க்கும் விலங்குகளையும் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து திருமணத்திற்கு அழைத்து வந்த மணமக்களின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

Views: - 419

0

0