வெற்றி யாருக்கு..? மேடையில் CM ஸ்டாலினுக்கு வைத்த ‘செக்’… தமிழகத்திற்கு வந்த காரியத்தை செய்து முடித்தாரா பிரதமர் மோடி..?

Author: Babu Lakshmanan
27 May 2022, 2:43 pm
Quick Share

சென்னை வருகை

பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான 11 நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டமைப்பு செயல்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியபோது தெரிவித்த கருத்துகள்பல்வேறு அரசியல் யூகங்களுக்கு விடை அளிப்பதாக இருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சில முக்கிய கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்தார்.

திராவிட மாடல்

“கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம். தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசு – திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும்.

14 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்கவேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும்.

ஹிந்திக்கு இணையாக தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்பவைதான் அவை.

மேலும் “மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமிக்கது.
பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுவது, பெரிய எண்ணிக்கையில் கல்வி நிலையங்கள், திறன் மிகுந்த மனித வளங்களில் தமிழகம் முன்னணி மாநிலம். அது மட்டுமல்ல சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றுக்கும் முன்மாதிரியானது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் தமிழகம். இதுதான் திராவிட மாடல்” என்று குறிப்பிட்டார்.

மறைமுக செய்தி

இதன்பின்பு திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகளுக்கு விழா மேடையிலேயே நேரடியாக பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மாறாக அவருடைய பேச்சோ தமிழக அரசுக்கு மறைமுகமாக சில செய்திகளை உணர்த்துவது போல் இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது.

மோடி, தான் தொடங்கிவைத்த 11 திட்டங்கள், உலக அளவில் இந்தியாவை மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக உருவாக்க தனது அரசு உள் கட்டமைப்பு, வளர்ச்சி பணிகளில் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைளை சிலாகித்துப் பேசினார்.

அதுதொடர்பாக மத்திய பாஜக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். அதே நேரம் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி பற்றி பேசிய நிலையில் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தையும் தமிழர்களையும் பெரிதும் புகழ்ந்தார்.

தமிழுக்கு புகழாராம்

“ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளங்குகின்றனர். அண்மையில்தான் நான், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்த போட்டிகளில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் பங்களிப்பும் அடங்கும்.

தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் மிகுந்தவை.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அங்கு நமது மண்ணின் மைந்தரான அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தின் பாரம்பரிய உடையுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். இது உலகெங்கும் உள்ள தமிழர்களை பெருமமை கொள்ளச் செய்தது.

தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்த இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு உள்ளது. செம்மொழி தமிழராய்ச்சி நிறுவனத்துக்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. அதில் நூலகம், பல்லூடக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பனராஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், சுப்ரமணிய பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அண்மையில்தான் அமைக்கப்பட்டது. பனராஸ் இந்துப் பல்கலைக்கழகம் எனது தொகுதியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காகத்தான் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவப் படிப்புகளை தாய் மொழியில் படிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பயனடைவார்கள்.

அண்டை நாடான இலங்கை மிகுந்த கடினமான சூழலை கடந்துகொண்டுள்ளது. நெருக்கடி நிலையில் உள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. எரிபொருள், பண உதவி, அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது” என்று
மோடி குறிப்பிட்டார்.

தேசிய கல்வி கொள்கை

பிரதமரின் இந்த உரை திமுக தலைவர்கள் எதிர்பார்த்ததுபோல அமையவில்லை என்ற எண்ணத்தை பொதுவெளியில் உருவாக்கி இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் வைக்கும் கோரிக்கைகளின் பட்டியல் மிக நீண்டதாக இருக்கும் என்பதால் அதற்கு பிரதமர்கள் பதில் அளிப்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அதனால்தான் விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி வெளிப்படையாக உறுதிமொழி எதுவும் கொடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சங்ககளுக்கு, அவற்றை பிரதமர் அனுப்பி வைக்கும் வாய்ப்பு உள்ளது.

Modi - Updatenews360

நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் கோரிக்கைக்கு, பதில் சொல்வதுபோல் பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து கருத்துக் கூறியது இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.

இந்திய மொழிகளை ஊக்குவிக்கும் நோக்குடனேயே தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை தங்கள் தாய் மொழியில் மாணவர்கள் படிக்க முடியும். இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

அதாவது நீட் தேர்வில் விலக்கு கோருவதற்கு பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஆதரியுங்கள் என்று மறைமுகமாக அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல்தான் கச்சத்தீவை மீட்கவேண்டும் என்கிற ஸ்டாலின் கோரிக்கைக்கு பிரதமர் அளித்த பதிலையும் எடுத்துக்கொள்ளவேண்டி உள்ளது.

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையிடம் இந்த நிபந்தனையை வைக்க முடியாது என்பதை பிரதமர் பூடகமாக உணர்த்தியிருக்கிறார். தவிர தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான், மத்தியில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கச்சத்தீவை 1974-ல் இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியும் இதில் மறைமுகமாக எழுப்பப்பட்டுள்ளது.

இதுபோல உள்ளர்த்தங்கள் அடங்கிய பல செய்திகள் பிரதமரின் உரையில் காணப்பட்டது. இது ஆளும் திமுக அரசுக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எழுச்சி

மோடி சென்னையில் கலந்துகொண்ட விழாவின் மூலம் தமிழகத்தில் 46 லட்சம் ஏழை விவசாயிகள் மத்திய அரசிடம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள் என்பதையும், இதுவரை ஏழரை லட்சம் பேர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை பெற்றுள்ளனர் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மோடியின் சென்னை வருகையில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அடையாறு விமானப்படைத் தளத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை உள்ள 9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலையோரம் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் அணிவகுத்து நின்று அவரை கையசைத்து வரவேற்றதுதான்.

இதை மோடியே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. ஆகையால்தான் அவருடைய வாகனம் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து சென்ற காட்சியையும் காண முடிந்தது. அவரும் பாதுகாப்பை பொருட்படுத்தாமல்
கார் கதவை திறந்து வெளியே நின்றவாறு, தன்னை வரவேற்க திரண்டிருந்த பாஜகவினரையும், வண்ண வண்ண உடைகள் அணிந்த குழந்தைகளையும் பார்த்து உற்சாகத்தில் கையசைத்தார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்புதான் இத்தகையதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்” என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 563

1

0