உலகச் சுற்றுச்சூழல் தினம் : ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 1:04 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் நடைபெற்றது.

ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் திரு. அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டம் சுமார் 5 கி.மீ பயணத்திற்கு பிறகு மீண்டும் அங்கேயே நிறைவு பெற்றது.

இது தொடர்பாக, அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறுகையில், “உலகளவில் மண்ணின் வளம் மிக வேகமாக அழிந்து வருகிறது. தற்போது இருக்கும் மண் வளத்தை கொண்டு அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியை தாண்டிவிடும்; ஆனால், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நாவின் ஆய்வு கூறுகிறது. இதனால், உலகில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அதிகளவில் இடம்பெயறுவார்கள், உள்நாட்டு போர்கள் மூளும் வாய்ப்பும் உள்ளது. மேலும், மண் வளம் இழப்பதால் நாம் உண்ணும் உணவின் சத்தும் குறைந்து வருகிறது.

எனவே, மண் வளம் இழப்பதை தடுக்கவும், இழந்த வளத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ‘மண் காப்போம்’ என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதற்காக அவர் லண்டன் முதல் தமிழ்நாடு வரை 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன” என தெரிவித்தனர்.

சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

இதுதவிர, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 நாட்களில்
தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டது. அதன்படி, கோவை மற்றும் திருப்பூரில் 63 ஏக்கரில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…