அடுத்தடுத்து காரில் சிக்கும் கரன்சி…ரூ.28.30 லட்சமப்பே: வசூலின் போது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய கோவை போக்குவரத்து துறை ஆணையர்..!!

Author: Rajesh
23 April 2022, 6:18 pm
Quick Share

கோவை: கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் பாலசுந்தரம் ரோட்டில் உள்ளது. இங்கு போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி பணியாற்றி வந்தார். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டில் வருகிறது.

ஆம்னி பஸ் அதிபர்கள், போக்குவரத்து பயிற்சி மைய உரிமையாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் மாதாந்திர வசூலை இவர் வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. உமாசக்தி இன்று பகல் 11 மணியளவில் பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணத்தை வசூலித்துக்கொண்டு கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி வழியாக காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீஸ் தனிப்படையினர் அங்கு சென்று அவரது காரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால் இணை கமிஷனர் உமாசக்தி அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் கத்தை, கத்தையாக பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து காருடன் உமாசக்தியை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

காரில் மொத்தம் ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது. மேலும் உமாசக்தி லஞ்சப்பணத்தை பெற்றுக்கொடுக்கும் உதவியாளராக ஓய்வு பெற்ற உதவியாளர் செல்வராஜ் என்பவரும் காரில் இருந்துள்ளார். அவரும் பிடிபட்டார். சமீபத்தில் சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 35 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவையில் ஒரு அதிகாரி பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 930

0

1