‘தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்போம்னு நாங்க சொல்லவே இல்ல’ : அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.பி. கனிமொழியின் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 6:05 pm
Kanimozhi - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மது ஒழிப்பு குறித்து மாணவி கேட்ட கேள்விக்கு திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று ஏதும் கூறப்படவில்லை என கனிமொழி எம்பி கூலாக பதில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை கல்லூரியில் மாணவ மாணவியர் திறமைகளை முன்னேற்ற நடந்த கலந்துரையாடலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.

அப்போது மாணவிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது கேள்வி எழுப்பிய மாணவி ஒருவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? ,மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன மேலும் காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் மது விற்பனை நிறுத்தபடுமா என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி அப்படி திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவும் கூறவில்லை. ஆகையால் மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாதது. அதற்கு பதிலாக கடைகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிர்ச்சி பதில் அளித்தார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவி மதுவிலக்கு காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மதுக்களை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மது கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய கனிமொழி மதுக்கடைகளில் தொழில்ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் காவல்துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்தார் .

அதே நேரத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் மது அருந்தி வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் தொடர் மின்வெட்டு மற்றும் மது ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து பதில் அளிக்காமல் கிளம்பி சென்றார்.

Views: - 1004

0

0