அபராதம் கட்ட முடியாததால் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர் : அதே இடத்தில் மனமுடைந்து மரணமடைந்த பரிதாப சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 5:53 pm
Panchayat Old Man dead - Updatenews360
Quick Share

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்ததால் அந்த இடத்திலேயே முதியவர் உயரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சுகண்ணு மகன் கலைச்செல்வம் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர்மீரான் உள்ளிட்ட இருவருக்கும் கடந்த 10 ஆம் தேதி ஊர் கோவில் திருவிழாவில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர்கள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். 

இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தில் அஞ்சுக்கண்ணு மகன் கலைச்செல்வத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கட்ட முடியாது என கலைச்செல்வம் கூறியதால் அபராத ரூபாய் 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பத்தாயிரம் ரூபாயையும் கட்ட என்னிடம் வசதி இல்லை என்று கலைச்செல்வன் கூறியதால் ஊர் பஞ்சாயத்தார் தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறி உள்ளனர். இந்த நிலையில் கலைச்செல்வன் தந்தை 65 வயதான அஞ்சுக் கண்ணு எனது மகனுக்கு பதில் நான் காலில் விழுகிறேன் என்று கூறி ஊர் நாட்டாமை பஞ்சாயத்தாரின் காலில் விழுந்துள்ளார்.

காலில் விழுந்த போது அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து உயிரிழந்த அஞ்சுக் கண்ணுவின் மகன் கலைச்செல்வன் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் நாகூர் மீரான் (வயது 35), பிரவீன் (வயது 24), வேதமணி (வயது 26), திவராஜன் (வயது 29) ஆகியோர்தான் தனது தந்தைக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் இறப்புக்கு காரணமானவர்கள் என்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க எதிர்த் தரப்பினரிடம் விசாரணை செய்தபோது பஞ்சாயத்தில் அபராதம் மட்டுமே செலுத்த சொன்னதாகவும், அதற்கு தன்னிடம் வசதியில்லை என அஞ்சுக்கண்ணு தாமாக முன்வந்து காலில் விழுந்தபோது அவரை கலைச்செல்வன் யார் காலிலும் விழ வேண்டாம் தள்ளிவிட்டு அதனாலேயே அஞ்சுகண்ணு மயக்கமுற்றார் என கூறுகின்றனர்.

இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ள நிலையில் புகாரில் குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்தால் மட்டுமே அங்கிகளின் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் திவராஜன், நாகூர் மீரான், வேதமணி, பிரவீன் ஆகிய நபர்கள் மீது 304 உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த அஞ்சுகண்ணுவின் உடலை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Views: - 512

0

0