‘எங்க தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சியில்ல’… 39 தொகுதிகளிலும் அதிமுக தான் ; பாஜகவை சீண்டிய ராஜன் செல்லப்பா!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 8:00 pm
Quick Share

வாய் சொல் வீரர்களாக பேசினார்களே தவிர, சென்னையில் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதற்கான பணியை செய்து முடிக்கவில்லை என்றும், 4000 கோடியை தண்ணீரில் மிதக்க விட்டுவிட்டார்கள் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா கூறுகையில்:- அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி ஏழைகளுக்கு உணவு வழங்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொதுச் செயலாளர் விவகாரத்தை சசிகலா வழக்கு குறித்த கேள்விக்கு:- சரியான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இன்று வழங்கியிருப்பது சரியான தீர்ப்பு தான். பொதுக்குழு நினைப்பதை, மக்கள் மன்றம் நினைப்பதை சட்டம் சொல்லி இருப்பதை நீதிமன்றம் வழியுறுத்தி இருக்கிறதாக நினைக்கிறோம். ஒவ்வொரு தீர்ப்பு வருகிற போதும் அதிமுக பொலிவாகி கொண்டே வருகிறது. அதிமுக தொண்டர்கள் சற்று ஒதுங்கி இருந்தாலும், அத்தனை பேரும் எடப்பாடியார் தலைமையில் இணைவார்கள், அதிமுக ஆட்சிக்கு வந்து திமுகவை வீழ்த்துகின்ற சக்தியாக அதிமுக திகழும், என்றார்.

தென்கால் கம்மாய் அருகே 42 கோடி மதிப்பில் சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு:- திருப்பரங்குன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வந்த பிறகும் திட்டங்கள் ஆனால் இன்னும் துவங்கவில்லை. இந்த சாலையை அமைப்பதற்கு முன்பு மக்களின் எண்ணங்களை கேட்டிருக்க வேண்டும். கண்மாய் கரையை உடைத்து சாலை போடுகிறார்கள் அதற்கு வேறு வழிகள் உள்ளது. இது சரியான திட்டமிடல் இல்லாமல் உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தான் சென்னையில் 4000 கோடி செலவு செய்தும் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையை நோக்கி எந்த புயலும் வரவில்லை, மழை தான் வந்தது, அதையே இந்த அரசு தாங்க முடியாமல், வாய் சொல் வீரர்களாக பேசினார்களே தவிர, அதற்கான பணியை செய்து முடிக்கவில்லை. 4000 கோடியை தண்ணீரில் மிதக்க விட்டுவிட்டார்கள்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு கூட்டணி முறிவு பிறகு பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேள்விக்கு:- வெளிப்படையாக சொல்ல போனால் தென்னிந்தியா வேறு, வட இந்தியா வேறு. டெல்லியில் ஆட்சியைப் பிடிப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதிமுக தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம். அம்மா 39 தொகுதிகளில் வென்ற போது யாருடனும் கூட்டணி வைத்து வரவில்லை. இன்றைக்கும் அதிமுக தனியாக நின்று அதிமுகவின் தயவை எதிர்நோக்கி இருக்கின்ற அரசாகத்தான் மத்திய அரசு இருக்கும், என்றார்.

Views: - 217

0

0