தமிழகத்தில் மேலும் ஒரு தேர் விபத்து… அச்சாணி முறிந்து தேர் கவிழ்ந்து 2 பேர் பலி : நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 10:11 pm
Dharmapuri CAr Accident - Updatenews360
Quick Share

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல் வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது.

இதை அடுத்து தேருக்கு அருகே கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிதறி ஓடினர். ஆனாலும், தேருக்கு அடியில் 5 பேர் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்டனர். அதில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் மனோகரன், சரவணன் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேர் கவிழ்ந்த போது பக்தர் ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன், சரவணன் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ஆணையிட்டுள்ளார்.

Views: - 633

0

0