நிதிஷ் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு… தேஜஸ்வி வீட்டு முன்பு நள்ளிரவில் போலீசார் குவிப்பு… பீகாரில் உச்சக்கட்ட பரபரப்பு…

Author: Babu Lakshmanan
12 February 2024, 8:56 am
Quick Share

பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டு முன்பு நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து, 9வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் புதிய அரசை அமைத்த நிலையில், நிதிஷ்குமார் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டு முன்பு நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்களும் தேஜஸ்வி வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் விடுத்துள்ள X தளப்பதிவில், “பீகார் மக்கள் இதனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பயந்து போய் குனிந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது. கொள்கைக்கான போராட்டத்தில் நாங்கள் போராடி வெல்வோம். இந்த ஒடுக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளது.

Views: - 175

0

0