வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை… தள்ளிப்போன பார்முலா 4 கார்பந்தயம் ; தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு!

Author: Babu Lakshmanan
5 December 2023, 5:16 pm
Quick Share

சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கனமழை கொட்டியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால், குறிப்பாக, தலைநகர் சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகளில் வெள்ளம் குளம் போல தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல, குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், உடமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இன்று அதிகாலையோட மழை நின்று விட்டாலும், குறிப்பாக வேளச்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகளை வைத்து மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீவுத்திடலில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கார் பந்தயம் நடப்பதாக இருந்தது. தீவுத்திடலிலிருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்றன.

இந்த சூழலில், சென்னையில் பெய் கனமழை மற்றும் வெள்ளத்தால் கார் பந்தயம் திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கார் பந்தயத்தை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கார் பந்தயத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 171

0

0