Bigg Boss 6 Tamil Episode 11: அசலுக்கும் தனலஷ்மிக்கும் சண்டை… ‘மே ஐ கம் இன்?’ – விக்ரமனின் தலையீட்டால் பற்றி எரிந்த நெருப்பு..!

Author: Vignesh
22 October 2022, 10:16 am
BB-updatenews360.jpg 3
Quick Share

பிக் பாஸ்: ‘தனக்குத் திருமணமாகி மகள் இருப்பதையும் அவளுக்கு தான்தான் தந்தை என்பது பலருக்குத் தெரியாது என்பதையும் அவர் உருக்கமாகச் சொல்ல மைனாவைத் தவிர வேறு யாரும் பஸ்ஸர் அடிக்கவில்லை.

பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது சண்டை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த முறையும் தனலஷ்மிதான் இதன் மையமாக இருந்தார். ‘நல்லா வெச்சிக்கிட்டாம்ப்பா பேரு’ என்பது மாதிரி அசல் கோளாறு உண்மையிலேயே கோளாறு பிடித்த ஆசாமியாக இருக்கிறார். தன்னிச்சையான ஆணாதிக்கத்தனம் நிரம்பிய, மனம் முதிராத இளைஞர்களின் பிரதிநிதியாக இவரை உதாரணம் காட்டத் தோன்றுகிறது.

ஏடிகேவாவாது அவ்வப்போது தன் இசைத்திறமையைக் காட்டுகிறார். ஆனால் அசல் காட்டும் திறமை பெரும்பாலும் வில்லங்கமானதாகவே இருக்கிறது. அல்லது அதை மட்டும்தான் காட்டுகிறார்களோ, என்னவோ! அது தனலஷ்மியோ அல்லது அசலோ, பிக் பாஸ் போன்ற பெரிய மேடையை இந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதம் ரசிக்கத்தக்கதாக இல்லை. பிக் பாஸ் என்பது உணர்வுகளின் மோதல் எளிதில் ஏற்படக்கூடிய அளவிற்கு நுட்பமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம். இதில் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, பிறரையும் காயப்படுத்தாமல் விளையாடுவதற்கு மிகுந்த சகிப்புத்தன்மையும் நிதானமும் வேண்டும்.

பாலசந்தர் இயக்கிய ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஒரு அருமையான காட்சிக்கோர்வை இருக்கிறது. ‘உருப்படாமல் வெட்டியாக சுற்றுகிற’ தன் மகனை சாப்பாட்டு மேஜையில் திட்ட ஆரம்பிப்பார் தந்தை. கோபத்தை அடக்கிக் கொள்ளும் மகன், குறும்பாக பதில் சொல்ல ஆரம்பிப்பான். மெல்ல மெல்ல இந்த உரையாடல் சூடாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் தன் குறும்பு முகமூடியை பின்பற்ற முடியாத மகன், கோபத்தோடும் அவமானத்தோடும் சாப்பாட்டு மேஜையில் இருந்து ‘விருட்’ என்று கிளம்பிச் செல்வான்.

bigg boss day11_updatenews360

தனலஷ்மிக்கும் அசலுக்கும் இடையில் நடந்த சண்டையின் துவக்கம் இந்தக் காட்சியை நினைவுப்படுத்தியது. பிக் பாஸ் சர்ச்சைகளில் நாம் எப்போதுமே நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியது இதைத்தான். நாம் பார்ப்பது சில காட்சித்துண்டுகள் மட்டுமே. சில கோணங்கள் மட்டுமே. அதற்கு முன்னால் எத்தனையோ நிகழ்ந்திருக்கும். எனவே ‘இவர்தான் குற்றவாளி’ என்று அவசரப்பட்டு தீர்ப்பெழுதி விட முடியாது; எழுதவும் கூடாது.

அசலுக்கும் தனலஷ்மிக்கும் சண்டை. ஊரே வேடிக்கை பார்க்குது’…

கிச்சன் ஏரியாவில் நின்று கொண்டிருந்த தனலஷ்மிக்கும் அசலுக்கும் வார்த்தைகளில் உரசல் ஏற்பட ஆரம்பித்தது. “நீ பார்க்க பேய் பொம்மை மாதிரி இருக்கே” என்று ஒரு கட்டத்தில் அசல் சொல்ல, “இவன் என்னை உருவக் கேலி செய்யறான்” என்று மிகச் சரியாகவே தன் புகாரை பொதுவில் முன்வைத்தார் தனலட்சுமி். அப்போதாவது தன் தவற்றை உணர்ந்து அசல் மன்னிப்பு கேட்டிருக்கலாம். விடலைத்தனத்தின் முதிர்ச்சியற்ற தன்மையோடு அவர் தொடர்ந்து பேச உரையாடலில் சூடு அதிகமானது. “என்ன பண்ணிடுவே” என்று அசலை எதிர்த்துக் கொண்டு நின்றார் தனலஷ்மி.

இப்போதுதான் இந்தச் சண்டையின் சூட்டை மற்றவர்கள் உணர ஆரம்பித்தார்கள். விசாரிக்கும் போது “என்னை ஆன்ட்டி-ன்றான். பெரியம்மா –ன்றான்..” என்று புகார் சொன்னார் தனலஷ்மி. இளைஞர்களுக்கேயுரிய குறும்பு மனப்பான்மையோடு அசல் நட்புரீதியாக கலாய்த்திருக்கலாம். ஆனால் ‘தன் கமென்ட்டால் ஒருவர் மனம் புண்பட்டிருக்கிறார்’ என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பதுதான் அடிப்படையான நாகரிகம். ஆனால் அசலோ, தமிழ் சினிமா ஹீரோ மாதிரி ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்கிற மோடில் இருக்கிறார். அவருக்கு அழகான பெண்களிடம் பேசுவதற்கு ஆசையும் இருக்கிறது. அதே சமயத்தில் எளிதில் புண்பட்டு விடும் தாழ்வு மனப்பான்மையும் இருப்பது போல் தோன்றுகிறது.

bigg boss day11_updatenews360

இருவருக்குள் தொடங்கிய இந்தச் சண்டையின் வெப்பம் வீடு முழுக்க பரவத் துவங்கியது. “அவ போட்டு வாங்கறா” என்று அசலின் காதில் புறணி பேசினார் ராம். நேற்று ஜனனிக்கு ஆறுதல் சொல்லி நல்ல பெயர் வாங்கிய ராமா இவர்?! பிரச்சினை பெரிதாகக்கூடாது என்பதால் தனலஷ்மியை அசிம் சமாதானம் செய்தது நல்ல விஷயம். “என்னை மட்டுமே தடுக்கறீங்க.. அவனை கேட்க மாட்டேன்றீங்க” என்று வெடித்தார் தனலஷ்மி.

‘மே ஐ கம் இன்?’ – விக்ரமனின் தலையீட்டால் பற்றி எரிந்த நெருப்பு

“என்னம்மா நடந்தது?” என்று விக்ரமன் விசாரிக்க வர, “நீ வாயேன்” என்று தனலஷ்மியைத் தள்ளிக் கொண்டு செல்ல அசிம் முயல, விக்ரமனுக்கு கோபம் வந்தது. தான் விசாரிக்க வரும் போது ஏன் தடுக்க வேண்டும் என்பது விக்ரமனின் ஆட்சேபம். இப்போது அசிமிற்கு சார்பாக முத்து வர, விக்ரமனின் கோபம் அங்கு பாய்ந்தது. “நீங்க எப்பவும் என்னையே குத்தம் சொல்றீங்க?” என்று அவர் படபடப்பாக பேச ஆரம்பிக்க, அதையும் தாண்டி வேகவேகமாக பேசினார் முத்து. “எங்க ஊர்க்காரராச்சேன்னு பார்க்கறேன்” என்று ஊர்ப்பாசத்தை இடையில் அநாவசியமாக நுழைத்தார் விக்ரமன். (ஊர்ப்பாசத்துல திருநவேலிக்காரவுகளை அடிச்சுக்கவே முடியாது!).

bigg boss day11_updatenews360

இந்தச் சமயத்தில் எரியும் நெருப்பில் மூலிகை பெட்ரோலை ஊற்றினார் ஏடிகே. “நீங்க எப்பவும் பொண்ணுங்க பக்கமே சப்போர்ட் பண்றீங்க” என்று வில்லங்கமான கமெண்ட்டை விக்ரமனிடம் சொல்லி விட, முத்துவை விட்டு விட்டு அங்கு பாய்ந்தார் விக்ரமன். ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. குறைந்த நாட்களிலேயே வீட்டிற்குள் நிறைய எதிரிகளை விக்ரமன் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர் எப்போதும் ‘உபதேச டோனில்’ பேசுவது பெரும்பாலோனோர்க்குப் பிடிக்கவில்லை. “அசல் பேசறதுல உனக்கு ஆட்சேபம் இருந்திருந்தா முதல்லயே சொல்லியிருக்கணும்” என்று ஷிவின் தனலட்சுமியிடம் சொன்னது ஒருவகையில் சரியான கருத்து.

விக்ரமனின் ‘நாட்டாமைத்தனத்தை’ப் பற்றி பிறகு சிலர் தனியாக மீட்டிங் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். “நீ கூட முதல்ல என்னை அண்ணான்னு கூப்பிட்ட. அப்புறம் திடீர்னு வாடா, போடான்னு சொல்ல ஆரம்பிச்சே. நான் அதை பெரிசா எடுத்துக்கலை” என்று தனலஷ்மியிடம் சொன்னார் ராம். இதில் அவருக்கு பிரச்சினையில்லாமல் இருக்கலாம். ஆனால் தனலஷ்மிக்கு பிரச்சினை இருக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ள முயல்வதுதான் முறையான வழி.

தனது பஞ்சாயத்தில் நிவாவைப் பிடித்து அநாவசியமாக இழுத்ததற்காக அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டது தனலஷ்மியின் நல்ல பண்பு. “அந்தப் பையன் அப்படித்தாம்மா..” என்று வீட்டிலுள்ள பெரும்பாலோனோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அசலின் விடலைத்தனத்தை ஆதரிக்கிறார்கள்.

மன உளைச்சல் காரணமாக நள்ளிரவைத் தாண்டியும் அழுது கொண்டிருந்த தனலஷ்மி, காமிரா முன்னால் வந்து “என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அதிகமாப் பேசிடுவனோன்னு பயமா இருக்கு. என்னை வெளிய அனுப்பிடுங்க” என்று முறையிட்டார். சிறிது நேரம் கழித்து “அவசரப்பட்டு சொல்லிட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். வெளிய அனுப்பிடாதீங்க” என்று கோரிக்கை வைத்தார். ‘நானே மாறி மாறிப் பேசறேன்’ என்று புலம்பிக் கொண்டிருந்த தனலஷ்மியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பிக் பாஸ் உள்ளே கூப்பிட்டு கவுன்சலிங் தந்திருக்கலாம்.

bigg boss day11_updatenews360

‘அழகா இருந்தா மாமா பொண்ணு.. சுமாரா இருந்தா தங்கச்சி’ – முத்துவின் ‘நச்’ கமென்ட்

நாள் 11 விடிந்தது. ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ பாடலை வெறித்தனமாக அலற விட்டார் பிக் பாஸ். காலையிலேயே தனலஷ்மி விவகாரத்தை கிச்சன் ஏரியாவில் கிளற ஆரம்பித்தார்கள், ரச்சிதாவும் மைனாவும்.

“இவ வீடியோல்லாம் போடறா.. சோஷியல் மீடியாவுல எவ்வளவு கிண்டல் பண்ணுவாங்க” என்று ரச்சிதா சொல்ல “படத்துல வர்ற ஒரு சீனை வெச்சே அவ்வளவு கலாயக்கறாங்க” என்று அதற்கு ஒத்து ஊதினார் மைனா. இவர்களின் அறியாமையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அநாமதேய முகமூடியோடு இணையத்தில் இழிவான பின்னூட்டங்களைப் பதிவு செய்யும் ஆபாச கலாசாரத்தை ‘அது அப்படித்தான்’ என்று ஏற்றுக் கொள்வது முறையானதல்ல. அவையாவது விர்ச்சுவல் உலகில் நடப்பவை. ஆனால் முகத்திற்கு நேராக நின்று ஒருவர் செய்யும் கிண்டலுக்கும் இணையக் கிண்டலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூடவா இவர்களுக்குத் தெரியாது?!

bigg boss day11_updatenews360

“க்வின்சி எனக்கு மாமா பொண்ணு.. அழகான மாமா பொண்ணு” என்று அசல் விட்ட இடத்தை தான் தொடர்கிறார் ராம். “அப்ப அளகா இருந்தா மாமா பொண்ணு.. சுமாரா இருந்தா தங்கச்சி. அப்படித்தானே?.. நல்லா இருக்குடா உங்க நியாயம்”.. என்று இந்தச் சமயத்தில் முத்து இடைமறித்துச் சொன்னது ‘நச்’சென்கிற அருமையான கமெண்ட்.

தன் டிஷர்ட்டில் இருந்த XXXTentacion என்கிற rap பாடகரைப் பற்றி முத்துவிடம் சொன்ன அசல், “சின்ன வயசுலேயே இவனைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. மூணே ஆல்பம்தான் போட்டான். டாப்புல வந்தான். பொறாமை அதிகமாகி கொன்னுட்டாங்க” என்று விளக்கம் தர “நீ கூட உலக ஃபேமஸ்தான்.. சேஃப்ட்டியா இருண்ணே.. புல்லட் ப்ரூப் ஜாக்கெட் போட்டுக்கோ” என்று முத்துவை அமுதவாணன் கலாய்த்தது ரணகளமான காமெடி.

‘காற்று வாக்கில் காதல்’ படத்தின் பாடலான ‘டூ.. டுடு..’ –க்கு ரச்சிதாவும் ஜனனியும் மேடையேறி நடனமாட ரச்சிதா வெற்றி. கதை சொல்லும் நேரத்தில் வீடியோவில் தோன்றினார் முத்து. “கஷ்டப்படற குடும்பம். மூணாவது வரைதான் படிப்பு. தொழில் நஷ்டம். டிக்டாக்ல வந்தேன்” என்று முத்து ஆரம்பிக்கும் முன்னரே மூன்று பஸ்ஸர்கள் அடிக்கப்பட ‘சவத்துமூதிகளா’ என்று சலித்தபடி வெளியே வந்தார் முத்து.

‘இந்தக் கதைங்கள்ல அப்பாக்கள்தான் பிரச்சினை’

அடுத்து கதை சொல்ல மேடை ஏறியவர் ராபர்ட். ‘தனக்குத் திருமணமாகி மகள் இருப்பதையும் அவளுக்கு தான்தான் தந்தை என்பது பலருக்குத் தெரியாது என்பதையும் அவர் உருக்கமாகச் சொல்ல மைனாவைத் தவிர வேறு யாரும் பஸ்ஸர் அடிக்கவில்லை. ராபர்ட்டின் கதையில் இருந்த சோகம் வீட்டைப் பாதித்தது. “நிறைய பேரோட கதையில அப்பாங்களாலதான் பிரச்சினை” என்று க்வின்சி சொன்னது சரியான விஷயம். “அதனாலதான் நான் மறுமணம் பத்தி யோசிக்கவேயில்லை” என்றார் மகேஸ்வரி. ராபர்ட் சொன்ன கதையின் தலைகீழ் வடிவம்தான் மகேஸ்வரியின் கதை. “என் பையன் அப்பாவைப் பற்றி ஒருமுறை கூட கேட்டதில்லை” என்று கண்கலங்கினார் மகேஸவரி.

“அசல் வாழற இடத்தையெல்லாம் நாம கண்ணால கூட பார்க்க முடியாது. அத்தனை மோசமா இருக்கும். அங்க இருந்து இவ்ள தூரம் வந்திருக்கான். ஸ்லம்டாக் மில்லியனர் கதை மாதிரி” என்று அசலைப் பற்றி ராம் சொல்லிக் கொண்டிருந்தது சரியான அப்சர்வேஷன்.

bigg boss day11_updatenews360

கதை சொல்ல வந்தார் ஆயிஷா. ‘எதையாவது உளறிடுவேன்.. தப்பாயிடும்’ என்று ஏற்கெனவே பயந்து கொண்டிருந்தவர் இவர். எனவே ‘சொல்றதுக்கு ஒண்ணுமில்ல’ என்று ஆயிஷா சொல்லிவிட மூன்று பஸ்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதே கதைதான் ரச்சிதாவிற்கும் நோ்ந்தது. ‘சாதாரண வாழ்க்கை எங்களுடையது’ என்று ஆரம்பித்த க்வின்சிக்கும் மூன்று பஸ்ஸர்கள். விதிகளின் மூலம் ‘அழுகாச்சி’ டாஸ்க் சுருங்குவது நல்லதுதான் என்றாலும் சிலரின் பின்னணிகளை நம்மால் அறிந்து கொள்ள முடியாதது ஒரு துரதிர்ஷ்டம்.

‘ஒண்ணே.. ஒண்ணு. கண்ணே. கண்ணு’ பாடலுக்கு அசிமும் ஷெரினாவும் ஆட, ஷெரினா வெற்றி. “நாலைஞ்சு வாட்டி கையைப் பிடிச்சு ஏன் இழுத்த?” என்று பிறகு அசிமிடம் ஜாலியாக விசாரித்துக் கொண்டிருந்தார் ஷெரினா. “டான்ஸ்ல கெமிஸ்ட்ரி வரணும்னான்.. பிஸிக்ஸ் வரணும்னான். ஆனா.. தோத்துட்டான்” என்பது போல் அசிமைப் பற்றி கதிரவனிடம் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் க்வின்சி. நியாயமான கிண்டல்தான். அசிம் தந்த பில்டப் அப்படி. சிரிப்பை அடக்க முடியாமல் க்வின்சியின் கிண்டலை ரசித்தார் கதிரவன்.

bigg boss day11_updatenews360

‘கேம் சூடு பிடிக்குது போல’ – சூடான அசிம்

ஆனால் க்வின்சி கிண்டலடித்த இந்த விஷயம் எப்படியோ அசிமின் காதிற்குச் சென்று விட்டது போல. “என்னைப் பத்தியா பேசிட்டு இருந்தீங்க?” என்று க்வின்சியிடம் அவர் நேரடியாக கேட்க, ‘ஆம்’ என்று க்வின்சி சொல்லியிருக்கலாம். “நெறைய விஷயங்களைக் கலாய்ச்சுட்டு இருந்தோம்” என்று அவர் மையமாக பதில் சொல்ல “ஓகே. கேம் சூடு பிடிக்குது போல” நமட்டுச் சிரிப்புடன் பேசினார் அசிம். (ஒண்ணு கூடிட்டிங்கய்யா.. ஒண்ணு கூடிட்டாங்க..!)

‘நல்லதங்காள்’ கதை போல தன் கதையை உணர்ச்சிகரமாக ஆரம்பித்த சாந்திக்கு மூன்று பஸ்ஸர்கள் உடனே வந்தன. விக்ரமன் கதையை ஆரம்பித்த அடுத்த விநாடியே கொலைவெறியுடன் பஸ்ஸர் மீது பாய்ந்தார்கள். “எனக்கு முன்னாடியே தெரியும்” என்று சங்கடமான சிரிப்புடன் வெளியே வந்தார் விக்ரமன். மணிகண்டன் சொன்ன கதை உருக்கமாக இருந்ததால் யாரும் தடுக்கவில்லை. அவருக்கு எதிரிகள் அதிகமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் தீபாவளி பரிசாக ஆடைகள் வந்தன. “ஹே..”என்கிற கூச்சலுடன் அனைவரும் எடுத்து அதை அழகு பார்க்க “பக்கிகளா. அதுல ஒரு லெட்டர் இருந்ததே. பார்த்தீங்களா?” என்பது போல் பிக் பாஸ் கேள்வி கேட்க, அதை எடுத்து வாசித்தார்கள். ஆடைகளை ஸ்பான்சர் செய்தவர்களின் வாழ்த்துக் கடிதம் அது. ஸ்பான்சர்களின் பெயர்களை பொதுவில் சொல்ல வைப்பதற்கான ஏற்பாடு போல. மக்கள் அதைத் தவற விட்டதால் வலுக்கட்டாயமாக வாசிக்க வைத்தார் பிக் பாஸ். (வெவரம்தேன்!)

Views: - 301

0

0