தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு கெட்டுப் போய்விட்டதா… இதோ மருந்து குழம்பு ரெசிபி!!! 

Author: Hemalatha Ramkumar
8 November 2024, 12:06 pm

அந்த காலத்தில் அனைவரது வீட்டிலுமே வாரம் ஒரு முறை மருந்து குழம்பு செய்வார்களாம். இந்த மருந்து குழம்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்யும். அதோடு இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மருந்து குழம்பு சாப்பிடலாம். ஆனால் இதனை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த குழம்பு உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருந்து பொடி தயாரிக்கும் பொழுது ஒரே ஒரு வரமிளகாய் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. இப்போது இந்த மருந்து குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சீரகம் – ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் – 5 

பரங்கி சக்கை – 3 துண்டுகள் 

வால் மிளகு – 2 டீஸ்பூன்

அரிசி திப்பிலி – 10 

ஓமம் – ஒரு டீஸ்பூன் 

சுக்கு – ஒரு சிறிய துண்டு கண்டந்திப்பிலி – 6 முதல் 7

வசம்பு – ஒரு விரல் அளவு

அதிமதுரம் – ஒரு சிறிய துண்டு 

வெந்தயம் – 1/2 டீஸ்பூன் 

தனியா – 2 டேபிள் ஸ்பூன் 

குழம்புக்கு தேவையான பொருட்கள் 

பூண்டு – 15 பல் 

சின்ன வெங்காயம் – 1/4 கிலோ 

புளி – ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவு மஞ்சள் தூள் 

நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி

செய்முறை 

*மருந்து குழம்பு வைப்பதற்கு முதலில் மருந்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளலாம். 

*இதனை வறுப்பதற்கு எண்ணெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. டிரை ரோஸ்ட் செய்தாலே போதுமானது. 

*வறுக்கும்போது பரங்கி சக்கையையும், சுக்கையும் உடலில் வைத்து இடித்து விட்டு அதன் பிறகு வறுத்துக் கொள்ளுங்கள்.

*பொருட்கள் அனைத்தையும் வறுத்தப்பிறகு நன்கு ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: ரத்தசோகைக்கு உடனடி தீர்வு தரும் பழங்கள்!!!

*இந்த பொடியை வைத்து 2 முதல் 3 முறை வரை உங்களால் மருந்து குழம்பு செய்ய முடியும். 

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். 

*எண்ணெய் காய்ந்தவுடன் 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்கவும். 

*கடுகு பொரிந்த உடன் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நீங்கள் பூண்டை இடித்து சேர்க்கலாம். 

*ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*பூண்டு ஓரளவு நிறம் மாறியதும் உரித்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். 

*வெங்காயம் வதங்கியவுடன் ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளியை 1 1/2 கப் தண்ணீரில் கரைத்து அந்த புளி கரைசலை கடாயில் சேர்த்துக் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். 

*குழம்பு கொதித்து வரும்போது ஒரு டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் நாம் தயார் செய்து வைத்துள்ள மருந்து பொடியில் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். 

*ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை குறைவான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும். 

*இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி, 1/2 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!