சண்டே ஸ்பெஷல்: வித்தியாசமான நாவூறும் சிக்கன் கிரேவி ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar4 June 2023, 11:08 am
மட்டன், மீன் போன்ற நான்வெஜ் வகைகளை காட்டிலும் சிக்கன் பலராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு. சிக்கனை வைத்து பலவிதமாக ரெசிபிகளை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வெங்காயம், தக்காளியை வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பிரட்டி சாப்பிட்டாலே சிக்கன் அற்புதமாக இருக்கும். இந்த பதிவில் வீட்டிலே மசாலா அரைத்து வித்தியாசமான முறையில் ஒரு சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு முதலில் 1/2 கிலோ சிக்கனை சுத்தமாக கழுவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி ஊற வைத்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வர மல்லி, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1/2 டேபிள்ஸ்பூன் சோம்பு, 4 காய்ந்த மிளகாய் , சிறிதளவு கசகசா, இரண்டு கிராம்பு, ஒரு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய் போன்றவற்றை ட்ரை ரோஸ்ட் செய்து ஆற வைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை போன்றவற்றை சேர்க்கவும். பின்னர் இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இரண்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சாஃப்ட்டாக வதங்கியதும் அதில் நாம் அரைத்து வைத்த மசாலா பொடி இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு நாம் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிக்கன் குறைந்தபட்சம் 7 நிமிடத்தில் வெந்துவிடும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0
0