சுட சுட மொறு மொறுப்பான வெண்டைக்காய் பக்கோடா ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
2 June 2023, 7:32 pm
Quick Share

பெரும்பாலான குழந்தைகளுக்கு வெண்டைக்காய் என்றாலே அலர்ஜி தான். ஏன் பெரியவர்கள் கூட வெண்டைக்காயை ஒதுக்கி தான் வைப்பார்கள். ஆனால் வெண்டைக்காயை மொறு மொறுப்பான பக்கோடாவாக செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். இந்த வெண்டைக்காய் பக்கோடாவை சுலபமாக செய்துவிடலாம். இப்போது இந்த மொறுமொறுப்பான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

வெண்டைக்காய் பக்கோடா செய்வதற்கு 1/4 கிலோ அளவிற்கு வெண்டைக்காயை எடுத்துக் கொள்ளலாம். முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் போட்டு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமாக கழுவிய வெண்டைக்காயை ஒரு காட்டன் துணி கொண்டு தண்ணீர் எதுவும் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும்.

பின்னர் வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு நறுக்குவது போலவே வட்ட வட்டமாக வெண்டைக்காயை நறுக்கி கொள்ளுங்கள். வெட்டி வைத்த வெண்டைக்காய்களை இப்பொழுது ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளலாம். இதனை ஃபேன் காற்றில் சிறிது நேரம் உலர விட்டு எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலமாக வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை முழுவதுமாக நீங்கிவிடும். பொரியலுக்கும் இதையே பின்பற்றினால் வெண்டைக்காய் ஒட்டாமல் வதக்குவதற்கு சூப்பராக இருக்கும்.

மேலும் பக்கோடாவிற்கு இதுபோல செய்யும் பொழுது பக்கோடா மொறு மொறுப்பாக கிடைக்கும். வெண்டைக்காய் பக்கோடாவின் சுவையை அதிகரிக்க ஒரு கைப்பிடி வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு நமக்கு தோலுரித்த வேர்க்கடலை தேவைப்படும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் காய வைத்த வெண்டைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனோடு வேர்க்கடலை, 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடலை மாவு மற்றும் அரிசி மாவு கூட குறைய சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நாம் கலந்து வைத்துள்ள பக்கோடா மாவை உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுட சுட மொறு மொறுப்பான வெண்டைக்காய் பக்கோடா இப்போது தயார். ஒருவேளை உங்களிடம் ரெடிமேட் பஜ்ஜி மாவு இருந்தால் வெட்டி வைத்த வெண்டைக்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் இன்னும் சுலபமாக வெண்டைக்காய் பக்கோடா செய்து விடலாம்.

Views: - 1887

0

0