இதய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரைக்காய்!!!

Author: Hemalatha Ramkumar
9 June 2023, 6:21 pm
Quick Share

நாம் உண்ணும் உணவுகளில் அவரைக்காயை அவ்வப்போது சேர்த்து இருப்போம். அவரைக்காய் சிறந்த சுவையுடைய காய்கறி மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள காய்கறி ஆகும். கெட்ட கொழுப்புகள் இல்லாத காய்கறிகளில் அவரைக்காயும் ஒன்றாகும்.
அவரைக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அவற்றால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

அவரைக்காயில் பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம், மெக்னீசியம், தயாமின், வைட்டமின் கே, வைட்டமின் பி6, ஃபோலேட், இரும்பு, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
அவரைக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இரத்த நாளங்களை பெரிதாக்கி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அவரைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் நமது உடலில் உள்ள செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
அவரைக்காயில் உள்ள மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறுவதை தடுத்து எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (ரத்த சிவப்பணுக்கள்) அளவை அதிகரித்து உடலில் உள்ள ரத்த நாளங்கள் அனைத்து உறுப்புகளுக்கும் எளிதில் ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடானது சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவற்றை உருவாக்க கூடிய ரத்த சோகையை உருவாக்குகிறது. அவரைக்காய் தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதால் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை போக்கப்படுகிறது.
அவரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைந்த அளவு கலோரிகள் அடங்கியுள்ளது.

இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
அவரைக்காயில் டோபமைன் நிறைந்துள்ளது. அவரைக்காய் உண்பதால் குறைந்த டோபமைன் காரணமாக உருவாகும் பார்கின்சன் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

போலேட் குழந்தைகளுக்கு சரியான மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்து ஆகும். அவரைக்காயில் உள்ள ஃபோலேட் சத்து மூளை மற்றும் முதுகு தண்டுவடம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 375

0

0