ஸ்காலர்ஷிப் படிவம் நிரப்பச் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை ..! உத்தரபிரதேசத்தில் தொடரும் அவலம்..!
26 August 2020, 12:36 pmஉத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியின் சிதைந்த உடல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது.
இது கடந்த 10 நாட்களில் இந்த மாவட்டத்தில் ஒரு டீனேஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இரண்டாவது சம்பவமாகும். நேற்று காலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமி கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்டதாகவும், கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர். அவரது கிராமத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில், வறண்டு போன குளத்தின் அருகே சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக எஸ்பி சதேந்தர் குமார், “பிரேத பரிசோதனை அறிக்கை பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்
சிறுமியின் உறவினர்களின் கூற்றுப்படி, ஸ்காலர்ஷிப் படிவத்தை நிரப்ப அண்டை நகரத்திற்குச் செல்ல அவர் திங்களன்று வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் நேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
“என்ன சொல்வது அல்லது யாரை சந்தேகிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. திங்களன்று காலை 8.30 மணியளவில் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டார். நாங்கள் யாரையும் சந்தேகிக்கவில்லை” என்று அவரது மாமா செய்தியாளர்களிடம் கூறினார்.