ஷோபியன் போலி என்கவுண்டர் வழக்கு..! இரண்டு நபர்களை கைது செய்த ஜம்மு காஷ்மீர் காவல்துறை..!

29 September 2020, 6:29 pm
Kashmir_Security_Forces_UpdateNews360
Quick Share

ஷோபியன் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தால் எட்டு நாட்கள் நீதித்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

“இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் இருவரை கைது செய்துள்ளோம்” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

அறிக்கையின்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் ராணுவத்திற்கு உள்ளூர் ஒத்துழைப்பாளர்களாக உள்ளனர். அவர்கள் எஃப்.ஐ.ஆரில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவியல் சதி என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சம்பவங்களின் தன்மை குறித்து வெளிப்படுத்த மேலும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ராஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட ஷோபியனில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் நேற்று தெரிவித்திருந்தார்.

“ஷோபியான் எஸ்.எஸ்.பி தானே விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விவரங்கள் மிக விரைவில் பகிரப்படும். எங்கள் விசாரணைகள் இறுதி கட்டத்தில் உள்ளன” என்று புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவில் செய்தியாளர்களிடம் டிஜிபி தெரிவித்தார்.

ஜூலை 18’ம் தேதி ஷோபியனின் அம்ஷிபோராவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதாக பாதுகாப்புப் படையினர் கூறியிருந்தனர். ஆனால் ராஜோரியிலிருந்து மூன்று குடும்பங்கள் கொல்லப்பட்டவர்கள் காணாமல் போன உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கூறினர்.

டி.என்.ஏ சோதனைகள் நடத்தப்பட்டு, 40 நாட்களுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள், கொல்லப்பட்டவர்கள் உண்மையில் ராஜோரியிலிருந்து காணாமல் போனவர்கள் என்பதைக் காட்டியது.

இதையடுத்து இராணுவம், இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிக்கையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அம்ஷிபோரா மோதலில் தவறாக பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0