அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக ரத்து: ஜம்மு காஷ்மீர் கவர்னர் அலுவலகம் அறிவிப்பு

21 June 2021, 10:49 pm
Quick Share

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 22 வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் யாத்திரை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில், பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்துள்ளது.இது தொடர்பாக கவர்னர் அலுவலகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், அமர்நாத் ஆலய வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், யாத்திரையை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

‘மக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம். எனவே, பெரிய அளவில் இந்த ஆண்டு யாத்திரை நடத்துவது நல்லதல்ல. சம்பிரதாயத்திற்காக மட்டுமே யாத்திரை நடைபெறும். ஆனால், அனைத்து பாரம்பரிய மத சடங்குகளும் புனித குகை ஆலயத்தில் செய்யப்படும்’ என கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கொரோனா அச்சம் காரணமாக இரண்டாவது ஆண்டாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Views: - 132

0

0