காங்கிரஸ் கட்சி போராட்டத்தின் எதிரொலி? மீண்டும் செயல்பட தொடங்கியது வங்கி கணக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 2:51 pm
rahul
Quick Share

காங்கிரஸ் கட்சி போராட்டத்தின் எதிரொலி? மீண்டும் செயல்பட தொடங்கியது வங்கி கணக்கு!!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். அதில், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்குகளை அதிகாரப் போக்கில் மோடி அரசு முடக்கியுள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இதுபோன்ற செயல் இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி கடுமையாகப் போராடுவோம் என கூறியிருந்தார். இதுபோன்று, ராகுல் காந்தி கூறியதாவது, காங்கிரஸை பார்த்து பிரதமர் மோடி பயப்பட வேண்டாம், நாங்கள் பண வலிமைமிக்க கட்சி அல்ல, மக்கள் வலிமைமிக்க கட்சி.

எதற்கும் நாங்கள் அடிபணியமாட்டோம். ஜனநாயகத்தை காக்க எங்கள் தொண்டர்களுடன் தொடர்ந்து போராடுவோம் என்றார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும், பாஜக அரசுக்கு எதிராகவும் இந்திய இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் உள்ள ஐஒய்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்திருந்தது. இதன்பின், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தற்காலிக அனுமதியை வழங்கியது வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம். அதன்படி, தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கின.

Views: - 190

0

0