அசாமில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:2 பேர் பலி

Author: Udhayakumar Raman
23 September 2021, 10:49 pm
Quick Share

அசாம்: ஆக்கிரமிப்பை அகற்றும்போது அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்திய போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அசாமில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்றும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தராங்கில் உள்ள சிபாஜ்ஹார் என்ற இடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 500 குடும்பத்தினருக்கு மேற்பட்டோர் வசித்து வந்தனர். அரசு அந்த நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதில் ஒரு பகுதியை மீட்டது. மீதமுள்ள பகுதியை மீட்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அரசு நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி அங்கு தங்கி இருந்த மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்திருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் மீது குடியிருப்புவாசிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் ஆக்கிரமிப்பாளர்களை கலைக்கும் நோக்கத்தோடு போலீசார் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

Views: - 144

1

0