காவல்துறை அலட்சியத்தால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை..! மேற்கு வங்கத்தில் சோகம்..!
22 August 2020, 2:24 pm16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மூன்று பேரை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சரியான நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் காவல்துறை செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது தந்தை காணாமல் போன அறிக்கையை அளித்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு, சிறுமியின் சிதைந்த உடல் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு செப்டிக் டேங்க்கில் இருந்து மீட்கப்பட்டது. அவரது தந்தையின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் பெயரளவில் விசாரணை நடத்தி விடுவித்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று, உள்ளூர்வாசிகள் போலீசாரை குற்றம் சாட்டி காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 10’ம் தேதி காணாமல் போன பின்னர் குறைந்தது ஐந்து நாட்களுக்கு உயிருடன் இருந்த சிறுமியின் குடும்பத்தினரால் எச்சரிக்கை செய்யப்பட்ட போதிலும், குற்றத்தைத் தடுக்க போலீசார் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
உள்ளூர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ககேஸ்வர் ராய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “ஆகஸ்ட் 15’ஆம் தேதி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இதன் பொருள் ஆகஸ்ட் 15 வரை அவர் உயிருடன் இருந்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு அதை தீவிரமாக எடுத்துக் கொண்டால் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கடமையில் இருந்து தவறியதாக உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்பைகுரி போலீஸ் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் யாதவ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் விசாரணை நடத்துவோம். கடமையை அலட்சியம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என யாதவ் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், ஆகஸ்ட் 10’ம் தேதி சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, மற்றொரு கூட்டாளியுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார். “குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அண்டை கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்கள் 30-35 வயதுடையவர்கள்” என்று யாதவ் கூறினார்.
“நீதிமன்றம் அவர்களை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பியுள்ளது. மேலும் விவரங்களை பெற குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரிக்கப்படும” என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.