3000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமி..! கர்ப்பமானதும் தெருவில் வீசிச் சென்ற கொடூரம்..!
30 September 2020, 3:56 pmசத்தீஸ்கரில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், ஒருவர் தனது 16 வயது மகளை 21 வயது இளைஞருக்கு ராய்கர் மாவட்டத்தில் ரூ 3,000’க்கு விற்றுள்ளார். பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அடுத்து யாருமில்லாமல் கைவிடப்பட்டார்.
சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவரது சோதனையைப் பற்றி பேசுவதற்கும் ஆறுதல் படுத்தி தேற்றுவதற்கும் ஐந்து மாதங்கள் ஆகியுள்ளது. இப்போது 18 வயதான அந்தப் பெண், தனது கற்பழிப்பாளரைப் பற்றி பேசுவதற்காக மீண்டும் குரல் கொடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
உணவு மற்றும் பணம் இல்லாததால், அந்த பெண் தெருக்களில் பட்டினி கிடந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மே மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அவரை சரியான நேரத்தில் மீட்டனர்.
அவரை மீட்பதற்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து யாரும் அவருக்கு உதவ வரவில்லை. பிரசவம் செய்யவிருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டார். பின்னர், சிறுமி ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஆரம்பத்தில், சிறுமி பிலாஸ்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த மாதம் ராய்கரில் உள்ள சாகி மையத்திற்கு மாற்றப்பட்டார்.
“சிறுமிக்கு சோதனை அவரது தாயார் இறந்தபோது தொடங்கியது. பின்னர் அவர் ஒரு ஆணுக்கு ரூ 3,000’க்கு விற்கப்பட்டார்” என்று ராய்கார் எஸ்.பி. சந்தோஷ் சிங் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக சிறுமியின் தந்தைக்கு உறுதியளித்தார். ஆனால் பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார்.
பாலியல் துஷ்பிரயோகத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி எப்போது தூக்கி வீசப்பட்டார் என்று கூட அவருக்கு நினைவில்லை. ஐந்து மாத சிகிச்சையின் பின்னர், தன்னைத் துன்புறுத்தியவரைப் பற்றி இறுதியாக அந்த பெண் வாய் திறந்தார்.
இந்நிலையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.