காந்தி சிலையின் முன்பு எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம்.. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு ; சோனியா காந்தி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 2:39 pm
Quick Share

‘பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த வாரம் மக்களவைக்கு அத்துமீறி நுழைந்த 2 பேர் வண்ணப் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகக் கூறி, திமுக, காங்கிரஸ் உள்பட இரு அவையிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சஸ்பெண்டு நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே எதிர்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு பங்கேற்ற சோனியா காந்தி, பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாகவும், நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், இதுவே பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை மோசமாக கையாண்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Views: - 255

0

0